வவுனியாவில் 10 வயது சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் இன்று (08) தெரிவித்தனர்.
வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 10 வயது மாணவி ஒருவர் கடந்த 4 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்ததையடுத்து, கடந்த 30 ஆம் திகதி குறித்த மாணவியின் சகோதரன், சிறிய தந்தையார் உள்ளிட்ட 16, 32, 53 வயதுடைய மூவரை வவுனியா சிறீலங்கா காவற்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர்.
குறித்த மூவரும் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும் வெளியாகியுள்ளது.
குறித்த அறிக்கையில் 10 வயது மாணவி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்றமைக்கு தாயின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம் என சமூகமட்ட அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.