13 பிளஸ் என்ற நோக்கத்துடன் செயற்பட்டதால் தான் 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை புறக்கணித்தார்கள். ஜனாதிபதியின் எதிர்கால ஜனாதிபதி கனவுக்காக 13ஐ அமுல்படுத்த இடமளிக்க முடியாது. 13 இக்கு எதிராக தென்னிலங்கையில் எதிர்ப்பை ஒன்றிணைப்போம் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார். 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த புதிய சட்டத்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.
நடைமுறை அரசியலமைப்பின் ஒரு திருத்தமாகவே 13 ஆவது திருத்தம் காணப்படுகிறது.ஆகவே புதிதாக சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. 13 ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்டு 13 பிளஸ் அமுல்படுத்த ஜனாதிபதி முயற்சிக்கிறார்.
விகிதாசார தேர்தல் முறைமையை இரத்து செய்வதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். விகிதாசார தேர்தல் முறைமையை இரத்து செய்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையினத்தவர்களாக வாழும் சிங்களவர்கள் உள்ளூராட்சி மன்ற சபைகளுக்கான பிரதிநிதித்துவத்தில் பாதிக்கப்படுவார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள், முஸ்லிம்கள் குறித்து கவனம் செலுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்களவர்களை இரண்டாம் பட்சமாக்கியுள்ளார்.
13 பிளஸ் என்ற நோக்கத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டதால் நாட்டு மக்கள் அவரை 2015 ஆம் ஆண்டு புறக்கணித்தார்கள்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 13 அமுல்படுத்த ஜனாதிபதி எடுக்கும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றிப் பெறாது. ஆகவே 13 ஆவது திருத்தத்துக்கு எதிரான தென்னிலங்கையின் எதிர்ப்பை ஒன்றிணைப்போம் என்றார்.