வடக்கை மையமாக கொண்ட வட-கிழக்கு அரசியல் பரப்பு “விசித்திரமானது” என நேற்று மீண்டும் ஒருமுறை அறிந்து சிலிர்த்துக்கொண்டேன் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
“13ம் திருத்தம்” பற்றி வாயை திறந்தாலேயே, “இந்திய-மேற்குலக கைக்கூலி” என ஒரு கும்பல் தயவு தாட்சண்யமில்லாமல் கூறுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
நான் என்னை நம்பும் மக்களுக்கு தான் “கைக்கூலி” இதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமா? எனவும் சமூக ஊடகத்தில் இன்று அவா் கருத்து வெளியிட்டுள்ளார்.
13 என்பது முழுமையான தீர்வென்றோ, அதுதான் இறுதி தீர்வென்றோ எம்மில் எவரும் ஒருபோதும் கருதவில்லை.
அரசு முகாமில் இருக்கும் அமைச்சர் டக்ளஸ்கூட 13ஐ முழுமையான இறுதி தீர்வு என கருதுகிறார் என நான் நினைக்கவில்லை.
அப்படி இருக்கையில், இதையும்கூட திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமா? இந்த அற்ப விவாதத்தை கடந்து நாம் பயணிக்க முடியாதா?
13ஐ “ஆரம்ப புள்ளி” யாக கருதிதானே மாகாணசபை தேர்தல் வந்தால் வடக்கு கிழக்கில் சகல கட்சியினரும் போட்டி இடுகிறார்கள்?
ஆக, எந்தவொரு இறுதி தீர்வும், “இதையும் தாண்டி” தானே அமைய வேண்டும்? இதைக்கூட முழுமையாக அமுல் செய்யாமல், எப்படி, அரசாங் கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது?
இதன் அடிப்படையில்தானே, இலங்கை வரும் ஒவ்வொரு இந்திய அரசு பிரதிநிதியுடனும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஆண்டாண்டு காலமாக பேசுகிறார்கள்?
அப்படியானால் இனிமேல், இத்தகைய இந்திய அரசுடனான பேச்சுகள் நிறுத்தப்பட போகின்றனவா?
மேலும் மாகாணசபை தேர்தல் பற்றிதானே ஐநா மனித உரிமை ஆணையம் உட்பட சர்வதேச நிறுவனங்களும் பேசுகின்றன?
“சமஷ்டி” தீர்வுகளை பெற தமிழருக்கு முழுமையான சுயநிர்ணய உரிமை இருக்கின்றது. அந்த உரிமையை பயன்படுத்தி, தமிழர்தாம் போராடி தீர்வுகளை பெற வேண்டும். உலகம் துணை பாத்திரம்தான் வகிக்க முடியும். வெளியில் இருந்து எவரும் வந்து, தட்டில் வைத்து “தீர்வு” தரப்போகிறார்களா, என்ன? எனவும் அந்தப் பதிவில் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
13 தமிழரின் அரசியல் தீர்வுக்கும ஆரம்பப்புள்ளியாகவும் அமையாது என்பதை பல தடவைகள் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டும் இன்னும் பேசுபொருளாக்கி இந்திய ஊது குழல்களாக செயற்படுகிறார்கள் 13ஜ வைத்து சிறீலங்காவின் தமிழின அழிப்பை ஒருபோதும் நிறுத்த முடியாது. என்பதனையும் இந்த ஊது குழல்கள் புரிந்து கொள்ளவேண்டும்.