13ம் நாளாக (20.02.2021) தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் ஜெனிவாவை அண்மிக்கிறது
சென்ற 08.02.2021 திகதி அன்று Netherlands நாட்டில் Den Haag மாநகரில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ஆரம்பமான ஈருருளிப்பயணம் 1430km கடந்து Lausanne மாநகரை வந்தடைந்தது. இன்று 20.02.2021 காலை தமிழீழ விடுதலைக்காக தம்மை அற்பணித்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்குமாக அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயணம் Swiss வாழ் தமிழ்மக்களின் பேரெழுச்சியுடன் இன்று Lausanne மாநகரில் நிறைவு பெற்றது. தமிழீழ விடுதலை எழுச்சியோடு எம் மக்கள் குமுகம் திரண்டு எழுந்து வரலாற்றுக்கடமையாற்ற தம்மைத்தாமே தயார் செய்கின்ற தருணம் இது.
எம்மினத்தின் இனவழிப்பினை மறந்தும் மறந்துவிடாது ஆறாத வடுக்களாக இன்னும் அதே வலிகளோடே நீதிக்காக நாம் காத்திருக்கின்றோம். எதிரியின் வஞ்சகத் திட்டமிடல்களினை முறியடிக்கும் நோக்கில் தன்னெழுச்சியாக புலத்திலும் தாயகத்திலுமாக எம் மக்கள் திரண்டு எமது விடுதலையின் அவசியத்தினை தெளிவுற சர்வதேசத்திற்கு எடுத்தியம்பி இருக்கின்றார்கள். அந்தவகையில் எதிர்வரும் 46வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையே அவசியம் என வலியுறுத்துவதும் தமிழீழமே எமக்கான நிரந்தர தீர்வு என்பதனையும் வலியுறுத்துவது எமது வரலாற்றுக்கடமையே.
தொடர்ச்சியாக 22 ஆவது தடவையாக விடுதலை ஓர்மத்தோடு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் நாளை 21.02.2021 காலை Lausanne மாநகரத்தில் இருந்து Geneva ல் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்) எமது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் பி.ப 4 மணிக்கு வந்தடைய இருக்கின்றது. பெரும் தடைகள் தினம் வரினும் மனதில் திடமும் மாவீரர்களின் ஆசியும் உள்ளவரை என்றுமே எம் பயணத்தில் நிலைதவறோம். இது எம் தாய் நிலம் மீது உறுதி. வெல்லும் வரை விடுதலை வேண்டி எம்மையே அற்பணித்தேனும் தமிழீழ மண் மீட்க போராடுவோம்.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”
ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்.
- தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.