13-வது சட்டத் திருத்தம் – ஒரு மாய மான்! பழ. நெடுமாறன்.

You are currently viewing 13-வது சட்டத் திருத்தம் – ஒரு மாய மான்! பழ. நெடுமாறன்.

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி – இலங்கை அதிபர் ஜெயவர்த்தன ஆகியோர் 29-7-87 அன்று ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகள் சார்ந்த குறைகளைத் தீர்ப்பதற்காக ஒரு உடன்பாடு செய்துகொண்டனர்.

இதன்படி இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் வரலாற்றுப் பூர்வமான தாயகம் என்பதும் அவை இரண்டையும் ஒரே மாகாணமாக இணைப்பது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும் இம் மாநிலத்திற்குத் தேர்தல் நடத்தப்பட்டு மாகாணக் குழு ஒன்றும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை உள்ளடக்கிய மாகாண சட்டமன்றம் அமைப்பது எனவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. கிழக்கு மாகாணத்தை வட மாகாணத்துடன் இணைப்பது குறித்து, கிழக்கு மாகாணத்தில் மக்கள் வாக்கெடுப்பு நடத்தி இறுதி முடிவு காண்பது எனவும் உடன்பாட்டில் கூறப்பட்டது. இந்த உடன்பாட்டில் கூறப்பட்ட மேற்கண்ட முக்கிய பகுதிகளை இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்வதற்காக 1988-ஆம் ஆண்டில் 13-வது அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதே நாளில் மாகாணக் கவுன்சில்கள் அமைப்பதற்கான சட்டமும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு அவர்களுக்கென்று தனி மாகாணம் அமைப்பது என இந்தியா இந்த உடன்பாட்டை இலங்கையுடன் செய்தது. ஆனால், சிறிய நாடான இலங்கையில், எஞ்சிய சிங்களப் பகுதிகளையும் ஏழு மாகாணங்களாகப் பிரித்து மொத்தம் 8 மாகாணங்களை உருவாக்குவதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினர். சிங்களர்கள் தங்களுக்குத் தனித்தனி மாகாணங்கள் வேண்டுமென்று கேட்கவில்லை. அது அவர்களுக்குத் தேவையுமில்லை. சிங்களர்களுக்கென்று ஒரு மாகாணமும் தமிழர்களுக்கென்று ஒரு மாகாணமும் அமைத்திருந்தால் போதும். தமிழர்களுக்கென்று ஒரு தீர்வினை தனியாக வழங்க சிங்கள அரசு விரும்பவில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. வடக்கு-கிழக்கு மாகாணக் குழுவிற்கான தேர்தல் 1988-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய ராணுவ மேற்பார்வையில் நடத்தப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பைச் சேர்ந்த வரதராசப் பெருமாள் என்பவர் தலைமையில் மாகாண அரசும் அமைக்கப்பட்டது. இந்தத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று பெரும்பாலானவர்கள் இந்தத் தேர்தலில் பங்கெடுக்கவில்லை. 1990-ஆம் ஆண்டில் இந்தியப் படைகள் வெளியேறியபோதே வரதராசப் பெருமாளும் அவரது அரசைச் சேர்ந்தவர்களும் வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். அதன் பிறகு வடக்கு-கிழக்கு மாகாணங்களை சிங்கள ஆளுநர் நிர்வகித்தார். 2006-ஆம் ஆண்டு அக்டோபரில் ஜனதா விமுக்தி பெரமுனா என்ற சிங்கள தீவிரவாத அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில்., வட-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டது அரசியல் சட்டப்படி செல்லாது என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது அதிபராக இருந்த ஜெயவர்த்தன நிர்வாக உத்தரவு ஒன்றின் மூலமே வட-கிழக்கு மாகாணங்களை இணைத்தார். எனவே இது சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு கிழக்கு மாகாணத்தில் அவசரம் அவசரமாக மாகாணக் கவுன்சிலுக்கான தேர்தல் நடத்த இலங்கை அதிபர் ராஜபட்ச ஆணை பிறப்பித்தார். ஏற்கெனவே கிழக்கு-மாகாணத்தில் இருந்த தமிழர்களில் பெரும் பகுதியினர் வெளியேறி முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தனர். ஏராளமான சிங்களர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டிருந்தானர். எனவே இந்தத் தேர்தலின் விளைவாக சிங்கள அரசுக்குக் கட்டுப்பட்ட மாகாண அரசு ஒன்று அங்கே அமைந்தது. வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோதும் அதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் மட்டும் தேர்தல் நடத்தப்பட்டபோதும் இந்திய அரசு அதில் தலையிடவில்லை. இந்திய-இலங்கை உடன்பாட்டிற்கு எதிரான செயல் இது என்பதைக் கண்டிக்கவோ அல்லது அரசியல் சட்டப்பூர்வமாக வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என வற்புறுத்தவோ இந்திய அரசு முன்வரவில்லை. 1987-ஆம் ஆண்டில் இந்திய-இலங்கை உடன்பாடு ஏற்பட்டபோது தமிழர் விடுதலைக் கூட்டணி அதை முழுமையாக வரவேற்றது. ஆனாலும் இந்த உடன்பாட்டிற்கு சட்டப்பூர்வமான வடிவம் கொண்டுவருவதற்காக நாடாளுமன்றத்தில் சிங்கள அரசு கொண்டுவந்த இரு சட்டங்கள் குறித்து தங்களது அவநம்பிக்கையை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சிவசிதம்பரம், செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம், துணைத் தலைவர் சம்பந்தன் ஆகியோர் 28-10-87-இல் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தனர். இக்கடிதத்தில் உடன்பாட்டிற்கு சட்டவடிவம் கொடுக்க இலங்கை அரசு எடுக்கும் முயற்சி குறித்து இந்திய அரசுடன் கலந்தாலோசித்தே எதுவும் செய்ய வேண்டும். இலங்கை அரசு கொண்டுவந்த இரு சட்டங்கள் குறித்து முன்னதாகவே இந்திய அரசுக்கு தெரிவித்து அதன் சம்மதத்தைப் பெறவேண்டும். இரு சட்ட முன்வடிவுகளும் பகிரங்கமாக வெளியிடப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டனர். ஆனால், இவ்வாறு இலங்கை அரசு எதுவும் செய்யவில்லை. இந்திய-இலங்கை உடன்பாட்டில் இரண்டாம் பகுதியில் 15-வது பிரிவில் வரையறுக்காது விட்டுப்போன உரிமைகள் குறித்து இந்திய அரசும் இலங்கை அரசும் கலந்தாலோசனை செய்தே எதுவும் செய்ய வேண்டும் எனத் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. அதை இலங்கை அரசு அப்பட்டமாக மீறிச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி அரசிதழில் வெளியிட்டுவிட்டது. “”கிழக்கு-வடக்கு மாகாணங்களை இணைப்பதை நிர்வாக உத்தரவின் மூலம் ஜெயவர்த்தன செய்திருக்கிறார். இவ்வாறு செய்திருப்பதை மீண்டும் மற்றொரு உத்தரவின் மூலம் ரத்து செய்ய முடியும். அரசியல் சட்ட ரீதியான பாதுகாப்பு இதற்கு இல்லை. மேலும் இலங்கை அரசினால் நிறைவேற்றப்பட்ட இரு சட்டங்களும் நாடாளுமன்றத்திற்கே சகல அதிகாரங்களையும் அளித்துள்ளன. அதாவது மாகாண கவுன்சில்கள், மாகாணத்திற்குரிய அதிகாரங்கள் இவற்றை மாற்றுவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 74 சதவிகிதம் உள்ள சிங்களர்களுக்கு நாடாளுமன்றத்தில் எப்போதும் பெரும்பான்மை இருக்கும். இந்த நிலையில் மேற்கண்ட சட்டங்களை எப்போது வேண்டுமானாலும் திருத்தவோ அல்லது அறவே கைவிடவோ சிங்களர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது”. மேற்கண்ட கடிதத்தை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எழுதியும்கூட அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்கு பின் அமைந்த அரசுகளும் ஈழத் தமிழர்களின் உரிமைகளைக் காக்கவோ அல்லது இந்திய -இலங்கை உடன்பாட்டை இலங்கை அரசு அப்பட்டமாக மீறியதைக் கண்டிக்கவோ எதுவும் செய்யவில்லை. ஆனால், செயலற்றுப்போன 13-வது சட்டத் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு இப்போதுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களை இந்திய அரசு வற்புறுத்துகிறது. 2009-ஆம் ஆண்டு போர் முடிந்த பிறகு 13 ஆண்டுகாலமாக இலங்கை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் திட்டமிட்ட இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த எதுவும் செய்யாத இந்திய அரசு இப்போது 13-வது சட்டத் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்துவது இனப்படுகொலை செய்யும் அரசின் அநீதிகளுக்கு அடிபணியுமாறு தமிழர்களை வற்புறுத்துவதாகும். மேலும் இந்திய அரசின் முக்கியமான பொறுப்புகளில் வீற்றிருப்பவர்கள் மீண்டும் மீண்டும் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதையே அடியோடு மறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஈழத் தமிழர்களை மீண்டும் அவரவர்கள் வீடுகளில் குடியேற்ற வேண்டும். அதற்காக இந்திய அரசு 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக அறிவித்தார்களே தவிர அங்கு தமிழர்கள் எத்தகைய அச்சம் நிறைந்த சூழலில் வாழவேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதைப்பற்றி கவலைப்படவில்லை. வடக்கில் தமது சொந்த நிலங்களை இழந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அரசுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். மேலும் 10 மில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குத் தேவையான நிலத்தைக் குத்தகைக்கு விடுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதன்படி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தமிழர் பகுதியில் அன்னிய நாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட இருக்கின்றன. இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜிப் படையினர் கையாண்ட இன அழிப்பு நடவடிக்கைகளை சிங்கள ராணுவம் வட மாகாணத்தில் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இவையெல்லாம் இந்திய அரசுக்குத் தெரியாமல் இல்லை.

ஆளுங்கட்சி மட்டுமல்ல, சிங்கள தீவிரவாதக் கட்சிகளும் 13-வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக உள்ளன. இச்சட்டத் திருத்தத்தை ரத்து செய்யாமலும் வடக்கில் சிங்கள மக்களை மீண்டும் குடியமர்த்தாமலும் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கூடாது என பொதுபல சேனாவின் செயலாளர் களப்போட்ட அத்தே ஞானசாரதேரர் அறிவித்திருக்கிறார். சாதிஹெல உறுமய என்னும் தீவிரவாத சிங்களக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க என்பவர் 13-வது சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற தனிநபர் சட்ட முன்வடிவை கொண்டுவரப்போவதாக அறிவித்திருக்கிறார். சகல கட்சிகளும் ஒன்றுகூடி தீர்வுத் தேரை இழுக்க முயலுகிறோம் என்று உலகுக்கு காட்டவும் இன அழிப்பு விசாரணைகளை திசை திருப்பவும், ஐ.நா.வில் இனி வரும் தீர்மானங்கள் தீர்வு பேச்சு வார்த்தைகளைக் குழப்பும் என்று கூறவும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவானது அவசியம் என சிங்கள அரசு கருதுகிறது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில் 13-வது சட்டத் திருத்தம் வலு இழந்தாலும் இந்திய – இலங்கை உடன்பாட்டில் உள்ள தனது பிராந்திய நலன்களை பாதுகாக்கும் ஏனைய விஷயங்கள் மாற்றப்படாமல் இருக்கும் என நம்புகிறது. ஆனால், இந்த நம்பிக்கை வீணான நம்பிக்கையாகும்.

மாய மானைப் பின்தொடர்ந்து சென்ற இராமன் அன்று ஏமாந்தான். இன்று ரணிலை  நம்பி பின்தொடர்கிற இந்தியாவும் ஏமாறப்போவது உறுதி.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply