14வது நாளின் (21.02.2021) தமிழின அழிப்பிற்கு நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டமும் அவற்றினைத் தொடர்ந்து ஆரம்பமாகும் 7 நாள் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டமும்.



தமிழீழ மண்ணும் மக்களும் பல தசாப்தங்களாக சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளபட்ட அடக்குமுறைகள் மற்றும் இனவழிப்புக்களினை சந்தித்துவந்துள்ளது.
காலத்துக்கு காலம் எவ்வகையில் எல்லாம் தமிழர்களினை அழிக்கலாம் என பல வழிகளிலே முயன்று 2009ம் ஆண்டு மிகக் கொடூரமாக தமிழின அழிப்பினை மேற்கொண்டு இற்றைவரையான காலப்பகுதியில் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல், பெளத்தமயமாக்கல், கலாச்சார சீரழிவு… என திட்டமிட்ட பல வழிமுறைகளில் சிங்களப் பேரினவாத அரசு தமிழர்கள் மீது இனவழிப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.



எனவே நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற இனவழிப்பிற்காக சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதியினை பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் தமிழீழத் தேசத்தின் விடுதலையினை வேண்டியும் 22வது தடவையாக மனித நேய ஈருருளிப்பயணம் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலினை (ஐ.நா முன்றலினை) வந்தடைந்தது.
08.02.2021 அன்று நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயணம் பெல்சியம், லக்சாம்பூர்க், யேர்மனி மற்றும் பிரான்சு நாடுகளை ஊடறுத்து இன்று 21.02.2021, 1500 Km கடந்து பல அரசியற் சந்திப்பினூடாக நாம் வாழும் நாடுகளினை இலக்கு வைத்து எமது நியாயமான கோரிக்கையினை ஐக்கிய நாடுகள் அவையில் 46வது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வலியுறுத்த வேண்டும் எனும் வேணவாவோடு ஈகைப்பேரொளி முருகாதசன் திடலினை (ஐ.நா முன்றலில் ) பெரும் எழுச்சியோடு வந்தடைந்தது.



நாளை 22.02.2021 திகதியன்று ஐக்கிய நாடுகள் அவையின் 46வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பிக்கின்ற முதலாம் நாளின் சமநேரத்தில் ஐ.நா முன்றலில் தொடர் 7 நாள் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்க இருக்கின்றது.
காலை 9.00 மணி முதல் மாலை 18.00 மணி வரை கவனயீர்ப்பு போராட்டமும் இடம் பெறும் .
மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையாளரின் கடந்த 27.01.2021 ன் அறிக்கையில் குறிப்பிட்ட மனித உரிமைகள் மீறல், தமிழின அழிப்பு சார்ந்து சிறிலங்கா அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் எனும் அறிக்கைக்கு பலம் சேர்க்கவும், மற்றும் 24.02.2021 அன்று தமிழின அழிப்பு சார்ந்த விவாதம் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.


எனவே சுவிசு வாழ் தமிழ் உறவுகளே இக்கால கட்டத்தின் தேவை அறிந்து உங்கள் அனைவரின் ஆதரவும் எமது அறவழிப்போராட்டத்திற்கு காலத்தின் தேவையாக இருக்கின்றது. எனவே உங்கள் வருகையினை பதிவு செய்து வரலாற்றுக் கடமையினையாற்றி கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வாருங்கள்.
“மக்கட் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”
“விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்”
- தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.
21/02/2021 (23.32 Europe)