கடந்த 02/09/2022 நெதர்லாந்தில் ஆரம்பித்து தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் 25 வது தடவையாக ஐரோப்பிய தேசம் எங்கும் தமிழர்களின் வேணவாக்களினை இடித்துரைக்கின்றது.
தமிழீழ மண்ணில் சிறிலங்கா பேரினவாத அரசின் ஆக்கிரமிப்பிற்குள் எம் மக்கள் தாங்கோணா துயரங்களை இன்றும் அனுபத்துக்கொண்டிருக்கிறார்கள். எம்மீது சர்வாதிகார சிறிலங்கா பேரினவாத அரசு கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிட்ட தமிழின அழிப்பின் வடுக்களோடே எம் மக்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். தமிழினம் நின்மதியாக வாழ தம் வரலாற்றுப் பூர்வ நிலமான தமிழீழத்தின் விடுதலையே உறுதியான தீர்வு, இவ்விடுதலைக்காக எம் அற்பணிப்புக்களோ ஏராளம். ஆயுத ரீதியிலும் சரி அறவழியிலும் சரி எம் போராட்டம் வீறு கொண்டபோதெல்லாம் பெரும் சக்தியாக இருப்பவர்கள் எம் மக்களே. மக்கள் புரட்சி வெடிக்க சுதந்திர தமிழீழம் மலர தன்னையே ஆகுதியாக்கிய தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் உண்ணா நோன்பின் இரண்டாவது நாள் இன்று. இந்த எழுச்சிமிகு மாதத்தில் எம் அறவழிப்போராட்டம் இலக்கு நோக்கி நகர்வது மிக முக்கியம். 51 வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும். எனவேதான் பல நாடுகள் கடந்து எதிர்வரும் 19ம் திகதி ஐ.நா முன்றலை வந்தடைய இருக்கின்றது மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்.
இன்று (16/09/2022) பேர்ன் மாநகரத்தினை ஊடறுத்துக்கொண்டு பயணிக்கும் வேளை பாராளுமன்றம் கடந்து பிறிபோர்க் மாநகரத்தில் தமிழீழ மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. கலந்து கொண்டு மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்ட செயற்பாட்டாளர்களை அன்பு பொங்க அக்கறையோடு நலம் விசாரித்தனர். குறிப்பாக தம்மிடையே எழுந்த கேள்விகளை கேட்டு தொடர் போராட்ட அனுபங்களை கேட்டறிந்து கொண்டனர் என்பது முக்கியமானவை. மாலை பயர்ன் எனும் மாநிலத்திலிருந்து மீண்டும் நாளை லவுசாண் மாநிலத்தினை நோக்கி ஈருருளிப்பயணம் நகர்கின்றது.
எதிவரும் 19/09/2022 திங்கட்கிழமை ஐ.நா முன்றலில் பி.ப 2 மணியளவில் நடக்க இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு எழுச்சிகரமாக பங்களிக்க வாருங்கள் என அனைவரையும் அன்புரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணா
“ இரத்தம் சிந்தி வியர்வை சிந்தி கண்ணீர் சிந்தி தாங்கொணாத் துன்பத்தின் பரிசாகப் பெறுவது தான் சுதந்திரம்.”
- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.