உலகளாவிய ரீதியில் 16 நாடுகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையொன்றின்போது, அந்தந்த நாடுகளின் குற்றத்தடுப்பு பிரிவினரால் சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நாடுகளில் இருந்தவாறு இயங்கிவந்த பாதாள உலக குழுக்கள் தொடர்பாக அமெரிக்க உளவு நிறுவனமான “FBI” நிறுவனத்துக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து, “FBI”, ஐரோப்பிய நாடுகளின் கூட்டு உளவு நிறுவனமான “Europol” மற்றும் இந்நடவடிக்கையில் ஒன்றிணைந்து ஈடுபட்ட நாடுகளின் உளவு நிறுவனங்களும், குற்றத்தடுப்பு பிரிவினரும் மிகமிக இரகசியமாக, குறித்த பாதாள உலக குழுக்களை பல மாதங்களாக பின்தொடர்ந்தும், அவர்களின் தகவல்களை ஒட்டுக்கேட்டும் வந்ததை தொடர்ந்து, குறித்த 16 நாடுகளிலும் ஒரே நேரத்தில் பல இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டதில் மொத்தமாக 800 பேர் கைதாகியுள்ளதோடு, பதுக்கி வைக்கப்பட்ட பெருந்தொகைப்பணம், போதைப்பொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக, மேற்படி பாதாள உலக குழுக்கள், தங்களுக்கிடையிலான தொடர்பாடல்களை “மறை குறியாக்கம் / Encrypted” முறையில் நடத்தி வந்ததாகவும், சரியான கடவுச்சொல் அல்லது குறியீடுகள் இல்லாமல், இம்முறை மூலம் பரிமாறப்படும் தகவல்களை வேறு யாரும் அறிந்துகொள்ள முடியாது என்பதாலேயே பாதாள உலக குழுவினர் இம்முறையை பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்படும் நிலையில், இத்தகவலை அறிந்துகொண்ட குற்றத்தடுப்பு பிரிவினர், பாதாள உலக குழுக்கள் பயன்படுத்தி வந்திருக்கக்கூடிய “மறை குறியாக்கம் / Encrypted” செயலிகளை தடைசெய்ததோடு, புதிதாக ஒரு “மறை குறியாக்கம் / Encrypted” செயலியை / (Application) கசிய விட்டிருந்ததோடு, இதுவிடயமாக “FBI” நிறுவனத்துக்கு தகவல் வழங்கியவரின் உதவியோடு, பாதாள உலக குழுவினர், குற்றத்தடுப்பு பிரிவினரால் கசிய விடப்பட்ட “மறை குறியாக்கம் / Encrypted” செயலியை பயன்படுத்தவும் வைத்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டில் அமெரிக்க “FBI” உளவாளிகளால் கைது செய்யப்பட்ட ஒருவர், பாதாள உலக குழுக்களுக்கு இவ்வாறான “மறை குறியாக்கம் / Encrypted” செயலிகளை தயாரித்து வழங்கியிருந்ததை விசாரணைகளில் இருந்து அறிந்து கொண்ட “FBI” உளவாளிகள், குறித்த நபரைப்போலவே பாதாள உலக குழுக்களுக்கு இவ்வாறான செயலிகளை தயாரித்து வழங்கிய இன்னொரு நபருடன் தொடர்பை ஏற்படுத்தியபோது குறித்த நபர், “FBI” உளவாளிகளை பாதாள உலக குழுக்களின் “மறை குறியாக்கம் / Encrypted” தொடர்பாடல்களின் தகவல்களை வழங்க சம்மதித்த நிலையிலேயே, குற்றத்தடுப்பு பிரிவினரின் தனியான “மறை குறியாக்கம் / Encrypted” செயலியை பாதாள உலக குழுக்களிடையே கசியவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குற்றத்தடுப்பு பிரிவினர் தயாரித்து கசியவிட்டிருந்த “மறை குறியாக்கம் / Encrypted” செயலியை முழுமையாக நம்பிய பாதாள உலக குழுவினர், அச்செயலியூடாகவே தங்களின் இரகசிய தொடர்பாடலை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த 3 வருடங்களாக அவர்களின் பரிமாற்றத்தகவல்களை ஊடறுத்து அவதானித்த குற்றத்தடுப்பு பிரிவினர், 16 நாடுகளிலும் ஒரே நேரத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளனர்.
குற்றத்தடுப்பு பிரிவினரால் கசியவிடப்பட்ட “மறை குறியாக்கம் / Encrypted” செயலிகளை இயக்குவதற்கென தனியான கைத்தொலைபேசிகளை பாதாள உலகக்குழுவினர் பயன்படுத்தி வந்ததாகவும், இவ்வாறான 12.000 கைத்தொலைபேசிகள் “FBI” நிறுவனத்தின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படும் நிலையில், 100 நாடுகளில் இயங்கக்கூடிய 300 கட்டமைக்கப்பட்ட பாதாள உலகக்குழுக்களால் மேற்படி செயலி பாவனையில் இருந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
“Operation Trojan Sheld” என்ற சங்கேத பெயர் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையின்போது பாதாள உலக குழுவினரின் போதைப்பொருள் வர்த்தகம், ஆயுதக்கடத்தல், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, படுகொலைகள் போன்ற விடயங்கள் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, டென்மார்க், எஸ்த்லாண்ட், பின்லாந்து, ஜேர்மனி, ஹங்கேரி, லிதுவேனியா, நியூசிலாந்து, நெதர்லாந்து, நோர்வே, சுவீடன், ஸ்கொட்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்தே இந்நடவடிக்கையை மேற்கொண்டிருந்ததுடன், அனைத்து நாடுகளிலுமாக 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.