2-வது ஒருநாள் போட்டி: 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

  • Post author:
You are currently viewing 2-வது ஒருநாள் போட்டி: 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது

இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் இன்று  இரவு பகல் ஆட்டமாக நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் சர்மா ( 159 ரன்கள்), கே.எல் ராகுல் (102 ரன்கள்) ஆகியோரின் அபார ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது. 
இதையடுத்து, 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தாரைவார்த்து வந்தது. ஷாய் ஹோப் (78 ரன்கள்) நிகோலஸ் பூரான் ( 75 ரன்கள்) ஆகியோர் ஓரளவு அதிரடி காட்டினர். இதனால், அந்த அணியின் ரன்ரேட் நல்ல நிலையில் இருந்தது. இருப்பினும் மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை நோக்கி மெல்ல மெல்ல பயணித்து கொண்டிருந்தது. இதற்கிடையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியின் நம்பிக்கையை தகர்த்தார். 
43.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 280 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதோடு, தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் மற்றும், முகம்மது சமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.  இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி வரும் 22 ஆம் தேதி கட்டாக்கில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

பகிர்ந்துகொள்ள