“2009 இன் தோல்வியை நாம் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தவில்லை” என்று ஆய்வாளர் நிலாந்தன் புதிய கருத்தை அவிழ்த்துவிட்டிருப்பதாக அறிந்தேன். ஈழநாதத்தில் உங்களையெல்லாம் கட்டுரையாளராக வலம்வர விட்டதை இயக்கம் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தியிருந்தால் இப்போது இந்தப் பதிகமெல்லாம் தாங்கள் பாட வாய்ப்பிருந்திராது.
வெற்றி/ தோல்வி என்ற “விளையாட்டுத்தனமான” சிந்தனையில்தான், போராட்டத்தை இன்னமும் நிலாந்தன் அணுகுகிறார் என்பது இன்றுதான் எனக்குத்தெரியவந்தது. இலட்சியம் தவறாத போராட்ட வெற்றிக்கும், போர்த்தளபாட / ஆளணி/ இன்படுகொலைத்திட்டமிடலினால் நிகழ்ந்த வீழ்ச்சிக்கும் வித்தியாசம் தெரியாத இவர், திடீர் ஞானவாக்குகள் அருளுவதற்கான காரணம் யாமறியேன் பராபரமே.
நிற்க…
03.07.2006 அன்று ஐரிஷ் விடுதலை அமைப்பின் (IRA) முன்னாள் தலைவரும், அதன் அரசியல் பிரிவின் (Sinn fein ) பிரதிநிதியுமாகிய மார்ட்டின் மக்கின்னஸ் அவர்கள் கிளிநொச்சிக்கு வந்திருந்தார். (முதல் தடவையாக வெளிநாட்டுப் போராட்ட அமைப்பொன்றின் பிரதிநியின் வருகையென்பதால் கிளிநொச்சியின் A9 வீதியின் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, போராளிகள் அவருக்குப் பாதுகாப்பு வழங்கினர்) , தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களோடு நீண்ட நேரம் உரையாடிய அவர், அதன்பின்னர் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டவிடயம் இதுதான்.
” தமிழீழ விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை மிகப்பெரும் தவறானதாகும். பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகளைச் சமதரப்பாக மதித்தே சர்வதேசம் செயற்படவேண்டும். எம்மையும், எமது விடுதலைப்போராட்டத்தையும் பிரித்தானியா அரசு “பயங்கரவாதம்” என்று முத்திரைகுத்தியபோதும், எம்மை சமதரப்பாக ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என வலியுறுத்தியே பேசச்சென்றோம்…..”
ஆனால் ; சமதரப்பாக ஏற்பதுபோல நடித்தபடியே, புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலப்பகுதியில் 160 போராளிகளைக் கொலைசெய்ததோடு மட்டுமன்றி போர்முனைப்புகளை முன்னெடுத்த சிறிலங்காவும் உலக அரசுகளும், அவர்கள் செய்த படுகொலையையும் பொறுத்துக்கொண்டே விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
2009 இன் இறுதிக்கணம் வரை , புலிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் கைவிடவில்லை, இலட்சியத்தையும் கைவிடவில்லை. இதைத் தமிழர்தரப்பின் தோல்வியென நிலாந்தன் நினைத்தால், புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் இலட்சியத்தையும் கைவிட்டு, குப்புறவிழுந்து அட்டாங்க வணக்கம் செய்வதைத்தான் “வெற்றி” எனக் கருதுகிறாரோ…?
நொங்கைக் குடிச்சுப்போட்டு, வெறிக்குது வெறிக்குது எண்டா, பனைமரத்தில குற்றமா குடிச்சவனில குற்றமா என்பது ஊருக்குத் தெரியும்.
-தேவன்