தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் 100 மேற்பட்ட தமிழாலயங்கள் தமிழ்மொழியோடு, தமிழினத்தின் பண்பாட்டுப் பனுவல்களை எமது அடுத்த தலைமுறைத் தமிழர்களுக்கு ஊட்டி வருகின்றன. ஆண்டின் தொடக்கமான தை மாதத்திலே உலகை தன் சக்தியால் உய்வித்துவரும் கதிரோனின் வளம்போற்றி நன்றி செலுத்தும் பண்பாட்டுப் பெருவிழாவான தைப்பொங்கலைத் தாயகம், தமிழகம், சிங்கப்பூர், மலேசியா உட்படத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளெங்கும் கொண்டாடிவருகின்றனர்.
தைத்திருநாளை தமிழினம் தனது நன்றியுணர்வின் வெளிப்பாடாகக் கதிரவனுக்கும், உழவுப்பொறியற்ற காலத்தில் உழவுக்கு உறுதுணையாக இருந்த காளைகளுக்கும் பொங்கலிட்டான். உற்றார், உறவுகளோடு கூடிக் குதூகலித்து விருந்துண்டு, விளையாடி மகிழ்ந்தான். புலம்பெயர் நாடுகளில் குளிரான காலநிலையிலும் தமது பாரம்பரியங்களைப் படையலிட்டு மகிழும் தமிழாலயங்களின் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், நகரமக்கள் மற்றும் நிர்வாகத்தினர் என ஒன்றிணைந்து மரபுவழிப் பொங்கலிடல், கலைநிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுகளோடு, தமிழாலயங்களின் உயிரோட்டமாகத் திகழும் ஆசான்களுக்கான பரிசுப்பொருட்கள் வழங்குதல் எனத் தமிழினத்தின் திருநாளானது பெரும் கூட்டுணர்வின் வெளிப்பாடாகவும் அமைகின்றது.
தமிழர் திருநாள் சிறப்புமிகு விழாவிலே தமிழ்க் கல்விக் கழகத்தால் வெளியிடப்பட்டுவரும் செயல்திறன் தொகுப்பான வெளிச்சவீடு 2024ஆம் ஆண்டிற்கான இதழின் வெளியீட்டு நிகழ்வானது சுவேபிஸ்கால் தமிழாலயத்தில் நடைபெற்ற தமிழர் திருநாள் நிகழ்விலே, தமிழ்க் கல்விக் கழகத்தின் பரப்புரைப் பிரிவுப் பொறுப்பாளர் திரு. தர்மலிங்கம் தீபன் அவர்களால் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பட்டது. சுவேபிஸ்கால் தமிழாலய நிர்வாகி திருமதி கமலேஸ்வரி கனகராஜா அவர்கள் தமிழாலய மாணவர்களான செல்வி திவாகரன் வைஷ்னா செல்வன் எட்வர்ட் மதன் மிதுன் ஆகியோரை அரவணைத்து நிற்க, அந்த மாணவச் செல்வங்களிடம் முதற்பிரதி கையளிக்கப்பட்டது. தமிழ்க் கல்விக் கழகம் இன்று புலம்பெயர் தலைமுறையின் பேரக்குழந்தைகளை வரவேற்று நிற்கும் சூழலில் எதிர்கால வரலாற்று ஆவணமாக இருக்கவுள்ள வெளிச்சவீடு மலர் அந்த மழலைகள் கைகளில் ஏந்திய காட்சியானது புதிய வரலாற்றைப் படைப்பார்கள் என்பதை எடுத்தியம்புவதுபோல் அமைந்தது.