நோர்வேயை உலுக்கிய பல கொலை வழக்குகளில், “Barneheia Saken” என அடைமொழி கொண்டு அழைக்கப்பட்ட இரட்டைப்படுகொலைகளும் அடங்கியுள்ளன. குறித்த வழக்கில், 2000 ஆம் ஆண்டில், தமது தந்தையரை சந்திக்க சென்ற 10 வயதான இரு சிறுமிகள் கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கு காரணமாக இருந்தார்கள் என சந்தேகிக்கப்பட்டு கைது கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள், குற்றவாளிகளாக அடையாளம் காட்டப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
2002 ஆம் ஆண்டில் தண்டனை விதிக்கப்பட்ட இரு இளைஞர்களில், “Viggo Kristiansen” என்பவர் மீது சாட்டப்பட்ட குற்றத்தை மீள்விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக முடிவு செய்யப்பட்டதையடுத்து 2021 ஆம் ஆண்டில் இவர்மீதான குற்றச்சாட்டுக்கள் பற்றிய மீள்விசாரணைகளின் பெறுபேறுகளையடுத்து, “Viggo Kristiansen” குற்றமற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சிறுமிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றமேதும் செய்யாமலேயே 21 வருடங்கள் சிறையில் கழித்தமைக்காக “Viggo Kristiansen” இடம் பகிரங்க மன்னிப்பை, நோர்வேயின் நீதியமைச்சர் “Emilie Enger Meh” தெரிவித்துள்ளார். நோர்வேயின் நவீன வரலாற்றுக்காலத்தில் இழைக்கப்பட்ட நீதிப்படுகொலையென வர்ணிக்கப்படும் இவ்விடயம், நோர்வேயின் காவல்துறையின் விசாரணைத்திறமைகளின்மீது கடுமையான விசனங்களை தோற்றுவித்துள்ளது.
இரட்டைப்படுகொலைக்காக, அதுவும் இரு சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்து, கத்தியால் குத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 21 வருடங்கள் தண்டனை பெற்ற “Viggo Kristiansen”, தனது இளமைக்காலத்தில் பெரும் பகுதியை சிறையில் கழித்த நிலையில், இப்போது குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டாலும், அவர் மீதான சமூகத்தின் கடுமையான பார்வை நீங்குவதற்கு நீண்டகாலம் எடுக்கும் எனவும், இனிமேல் தொழில் வாய்ப்புக்களை இயல்பாக அவரால் பெற்று, சமூகத்தோடு இணைந்து சாதாரண வாழ்வொன்றை ஆரம்பிப்பது அவ்வளவு சுலபமான காரியமில்லையென்றும் தெரிவிக்கும் அவரது சட்டவாளர், அவருக்கு இழைக்கப்பட்ட நீதிப்படுகொலைக்கு இழப்பீடாக பல மில்லியன் குறோணர்களை அரசு செலுத்த வேண்டும் எனவும், முதற்கட்டமாக “Viggo Kristainsen” தனது வாழ்வை ஆரம்பிப்பதற்கு ஆரம்ப கட்டமாக 5 மில்லியன் குறோணர்களை அரசிடமிருந்து கோரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.