உத்தேச 21 ஆம் திருத்த சட்டத்தின் மூலமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை எதிர்பார்க்க முடியாது, எனினும் அரசியல் ஸ்திரத்திரத்தன்மையை ஓரளவேனும் உறுதிப்படுத்த சாதகமாக அமையும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்திருந்தார். நேற்று நீதி அமைச்சில் முன்னெடுக்கப்பட்ட இந்த சந்திப்பில் நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைகள் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடியிருந்தனர்.
தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைகளில் இருந்து மீள்வதற்கான நீண்டகால வேலைத்திட்டமொன்றை உருவாக்கும் முயற்சியில் தான் ஈடுபட்டு வருவதாகவும், அரசாங்கங்கள் மாறினாலும் உறுதியான கொள்கை வகுக்கப்பட வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ள நீதி அமைச்சர், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள உத்தேய 21 ஆம் திருத்த சட்டத்தின் மூலமாக பாரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
எனினும் அரச நிறுவனங்களை சுயாதீனமாக செயற்படுத்த வேண்டிய கட்டாயம் மற்றும் நிறைவேற்று அதிகாரத்தின் அனாவசிய தலையிடுகள் தவரிக்கப்பட்டு பாராளுமன்ற கட்டமைப்பு பலப்படுத்தப்படுவது இப்போதுள்ள நிலையில் ஆரோக்கியமானதாக அமையும் எனவும், பாராளுமன்ற சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட்டு சகல கட்சிகளின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதன் மூலமாக நாட்டின் நெருக்கடி நிலைமைகளுக்கு மாற்று தீர்வுகளை காண முடியும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளில் இருந்து மீள்வதற்கு சர்வதேசத்தின் முழுமையான ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும், அமெரிக்காவினால் இலங்கைக்கு கிடைத்துவரும் உதவிகளுக்கு இலங்கை நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர், தொடர்ந்தும் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை பலப்படுத்த தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.