24.000 வருடங்களாக உறைநிலையிலிருந்த நுண்ணுயிர் வகையை சேர்ந்த புழுக்கள் இப்போது மீண்டும் விழித்துக்கொண்டுள்ளன.
“Wheel Worms / சக்கர புழுக்கள்” என அழைக்கப்படக்கூடிய இவ்வகையான நுண்ணுயிரிகள் அளவில் சுமார் 0.1 இலிருந்து 1.0 மில்லி மீட்டர் வரையே இருக்கக்கூடியவை எனவும், அதனால் இவற்றை அவதானிப்பதற்கு அதி சக்திவாய்ந்த உருப்பெருக்கி தேவை எனவும் தெரிவிக்கப்படுகிறது. நன்னீரில் வாழக்கூடிய இவ்வகை உயிரிகள், ஒரு லிட்டர் நன்னீரில் பலநூறு அளவில் இருக்குமெனவும் ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
குளிர் காலங்களில் ஏற்படக்கூடிய கடுமையான உறைநிலைகளின் போது, இந்த உயிரிகள் பல மாதங்களுக்கு உறைநிலையில் இருப்பதோடு, பொருத்தமான காலநிலை வரும்போது மீண்டும் இயங்கு நிலைக்கு வரக்கூடியவை எனவும், தேவை ஏற்படும்போது சுமார் பத்து வருடங்கள் வரையும் இவ்வுயிரிகள் உறை நிலையிலேயே இருக்கக்கூடியவை எனவும் தெரிவிக்கும் ஆய்வாளர்கள், எனினும், சமீபத்தில் ரஷ்ய ஆய்வாளர்கள் கண்டறிந்த விடயம் ஆச்சரியத்தை தருவதாக தெரிவிக்கின்றனர்.
ரஷ்யாவின் அதியுறை பனிப்பிரதேசமான “Sibir /சிபீர்” பகுதியின் பனியுறை பகுதியிலிருந்து பெறப்பட்ட இரு மண் மாதிரிகளிலிருந்து குறித்த வகையான நுண்ணுயிரிகள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, மேற்குறித்த மண் மாதிரிகள் சுமார் 23.960 வருடங்களுக்கும் 24.485 வருடங்களுக்கும் இடைப்பட்ட பழமை வாய்ந்தவை என்பது கவனிக்கத்தக்கது.
மிகவும் உறை நிலையிலிருந்த குறித்த மண் மாதிரிகள் ஆய்வுகூடத்திற்கு கொண்டுவரப்பட்டு, சாதாரண வெப்பநிலைக்கு கொண்டுவரப்பட்டதும் அம்மண் மாதிரிகளில் உறைநிலையிலிருந்த நுண்ணுயிரிகள் விழித்துக்கொண்டு வழமை நிலைக்கு திரும்பியதாக ஆச்சரியத்தோடு தெரிவிக்கும் ஆய்வாளர்கள், பெண்புழுக்கள், ஆண் புழுக்களோடு இணையாமல் தாமாகவே இனப்பெருக்கம் செய்ததாகவும், பெண்புழுக்கள் தம்மைப்போலவே அச்சு அசலான புதிய புழுக்களை உருவாக்கியதாகவும் மேலும் அதிசயிக்கிறார்கள்.
குறித்த நுண்ணுயிரிகள் தொடர்பிலான மேலதிக ஆய்வுகள், எதிர்காலத்தில் மனித உடல்களையும், மனிதர்களின் உள்ளுடல் உறுப்புக்களையும் பல்லாண்டுகளுக்கு உறைநிலையில் பத்திரப்படுத்தி வைத்து மீண்டும் பயன்படுத்த முடியுமா என்பது போன்ற ஆய்வுகளுக்கு தெளிவான விடையளிக்குமென ரஷ்ய ஆய்வாளர்கள் நம்புவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.