25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின் ஆரம்பப் புள்ளி ; கஜேந்திரகுமார் நம்பிக்கை

You are currently viewing 25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின் ஆரம்பப் புள்ளி ; கஜேந்திரகுமார் நம்பிக்கை

தமிழ்த் தேசிய அரசியலில் முக்கிய திருப்புமுனையின் ஆரம்பப் புள்ளியாக, எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பு அமையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, அவர் இதனைத் தெரிவித்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்ததாவது:

சில கட்சிகள், தங்களது தேவைக்காக அல்லது புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்து, தனித்து செயல்பட முயல்கின்றன.

ஆனால், கடந்த பாராளுமன்ற அமர்வின் போது, பாராளுமன்ற குழுத் தலைவர்கள் மத்தியில் கலந்துரையாடல் நடந்தது. அது, அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கவேண்டிய நோக்கில் அமைந்தது.

இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பில், பாராளுமன்ற குழுத் தலைவர்களைத் தாண்டி, கட்சியின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதோடு, இனப்பிரச்சினை தொடர்பாக அறிவியல் மற்றும் அதிகார ரீதியான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் நபர்களையும் இணைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

இந்த சந்திப்பு ஆக்கபூர்வமாக அமைய வேண்டும். கட்சி ரீதியாக பேசப்பட்டு, ஒருமித்த முடிவுக்கு வரவேண்டியது அவசியம்.

நாம் கலந்துரையாடிய பிறகு, கட்சியின் அனுமதியைப் பெற வேண்டும் என்பதே முறையாகும். எந்த ஒரு குழுவும் கட்சியின் அனுமதியின்றி செயல்படக்கூடாது.

எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறும் சந்திப்பு, தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும். அரசாங்கம் தனது வசதிக்கேற்ப தமிழ்த் தேசிய அரசியலை நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை வலியுறுத்தும் தரப்புக்கள் ஒன்று கூட வேண்டும்.

தமிழர்களின் பாரம்பரிய அரசியல் நிலைப்பாட்டை மக்கள் மதிக்க வேண்டும். தமிழ் தேசிய அரசியல், உரிய கௌரவத்துடன், எதிர்காலம் நோக்கி முன்னேற, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதனை உணர்ந்து செயற்படுவதற்காகவே, இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply