புதிய தமிழ்ப் புலிகள்” இயக்கத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமாக தமிழீழத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களே இருந்தார். இவ் இரகசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே உறுதியும், துணிவும் தியாக சிந்தையும் கொண்ட புரட்சிகர இளைஞர்களை இவ்வமைப்பில், தலைவர் பிரபாகரன் அவர்கள், தானே தெரிவு செய்து சேர்த்துக் கொண்டதோடு, அவர்களுக்குரிய போர்ப் பயிற்சியையும் முன்னின்று தானே கொடுத்து வந்தார்.
புதிய தமிழ்ப் புலிகளின் முதலாவது இராணுவ நடவடிக்கையாக, 1975 ஜூலை 27 அன்று பொன்னாலை வரதராஐப் பெருமாள் கோவிலுக்கருகில் வைத்து அப்போதைய சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளரும், யாழ்ப்பாண மேயருமான அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொல்லப்பட்டார். இத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த புதிய தமிழ்ப்புலிகள் தமிழினத் துரோகி அல்பிரட்துரையப்பா கார்ச் சாரதியை மடக்கி, அவரது காரிலேயே ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர்.
இவ்வெற்றிகரமான முதலாவது இராணுவ நடவடிக்கையைத் தானே வகுத்து அதற்குத் தலைமை தாங்கிச்சென்று செய்து முடித்த பெருமை தலைவர் பிரபாகரன் அவர்களையே சாரும். தமிழீழ மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்க முயலும் தமிழ்த் துரோகிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்ததுடன் சுதந்திர தாகம் கொண்ட தமிழ் இளைஞரைப் பொறுத்தவரை இந்நடவடிக்கை தமிழீழ விடுதலையை நோக்கிய நீண்ட, கடினமான பயணத்தில் தமிழீழத்தேசியத்தலைவர் பிரபாகரனின் ஆளுமையிலும் தலைமைத்துவத்திலும் நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும் அமைந்தது.
முக்கிய குறிப்பு :
- 1974ஆம் ஆண்டு சனவரி மூன்றாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதி வரை தமிழ் மக்கள் தமது மொழி, பண்பாடு என்பனவற்றை உள்ளடக்கி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடாத்துவதற்கு ஏற்பாடு செய்தார்கள். 1974ஆம் ஆண்டு சனவரி பத்தாம் திகதி இறுதி நாளாகக் கொண்டாடப்பட்டது. இறுதி நிகழ்வாக அறிஞர்கள் தமிழின் பெருமைகளையும், பண்பாட்டின் பெருமையையும் பற்றிப் பேசினார்கள். மக்கள் உணர்வோடு கைதட்டி உற்சாகப்படுத்தினர். இறுதியாகத் தமிழகப் பேராசிரியர் “நைனா முகமது” பேசிக் கொண்டிருக்கும் போது சிங்கள பேரினவாத அரசு மற்றும் அல்பிரட் துரையப்பா இணைந்து பிறப்பித்த உத்தரவில் யாழ். உதவி காவற்துறைமா அதிபர் சந்திரசேகரா தலைமையில் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த மக்களைத் தாக்கியதுடன், துப்பாக்கியாலும் சுட்டார்கள். இச் சம்பவத்தில் ஒன்பது பொதுமக்கள் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தனர். அரங்குகள் சேதமடைந்தன. இம்மாநாட்டினைக் குழப்பிய யாழ் உதவிக் காவற்றுறை அத்தியட்சகர் சந்திரசேகரா பின்னர் சிறீமாவோ பண்டாரநாயக்கா அவர்களால் காவற்றுறை அத்தியட்சகராகப் பதவி உயர்த்தப்பட்டார்.
- புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது.