34,500 படுக்கைகளை தயார் செய்கின்றது சென்னை மாநகராட்சி!

  • Post author:
You are currently viewing 34,500 படுக்கைகளை தயார் செய்கின்றது சென்னை மாநகராட்சி!

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் கூடுதலாக 34,500 படுக்கைகளுடன் தனிமைப்படுத்தும் மையங்களை உடனடியாக அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,203 ஆக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் 500க்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. குறிப்பாக, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அறிகுறி இன்றி தொற்று கண்டறியப்படுபவர்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும், லேசான பாதிப்பு உள்ளவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ராயபுரம், திரு.வி.க.நகர் உள்ளிட்ட மண்டலங்களில் மக்கள் அடர்த்தி அதிகம் இருப்பதால், அப்பகுதியில் வேகமாக தொற்று பரவல் இருக்கிறது. தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு புதிய வழிமுறைகளில் நடவடிக்கைகள் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சமூகத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களை தங்க வைக்க தனிமைப்படுத்துதல் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொற்று பரவலை குறைக்க, அப்பகுதிகளில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அவருடன் தொடர்பில் இருந்த மற்றவர்களை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளை தவிர்த்து மீதமுள்ள நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகள், மாநகராட்சி சமூக கூடங்கள், தனியார் கல்யாண மண்டபங்கள் ஆகியவற்றை கண்டறிந்து இந்த மையங்கள் அமைக்க வேண்டும் என மண்டல அலுவலர்களுக்கு சென்னை மாநகரட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு உள்ளிட்ட எட்டு மண்டலங்களில், மண்டலத்திற்கு தலா 3000 படுக்கை வசதிகளை கொண்ட தனிமைப்படுத்தும் மையங்களை ஏற்படுத்த வேண்டும்.

மீதமுள்ள ஏழு மண்டலங்களில் தலா 1,500 படுக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும். இந்த உத்தரவை மிக அவசர உத்தரவாக எடுத்துக்கொண்டு மண்டல அலுவலர்கள் பணிகளை தொடங்க வேண்டும்.

வட்டார துணை ஆணையர்கள் இந்த பணியை கண்காணிக்க வேண்டும். கண்டறியப்பட்ட மையங்களில் தூய்மை பணிகளை முடித்து 29ஆம் திகதி அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

பகிர்ந்துகொள்ள