கத்தார் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வெற்றிபெற்றதை அடுத்து பிரான்ஸ் முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. பிரான்ஸ் அணி பெனால்டி முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், பாரிஸ், நைஸ் மற்றும் லியான் நகரங்களில் ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் தெருக்களில் குவிந்தனர்.
பாரிஸ் நகரில் அமைந்துள்ள பிரபலமான Champs-Elysees பகுதியில் கலவர தடுப்பு பொலிசாருக்கும் கால்பந்து ரசிகர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனிடையே, லியான் பகுதியில் கலவரம் வெடித்ததை அடுத்து கலவர தடுப்பு பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தேசியைக் கொடிய போர்த்தியபடி கற்கள், போத்தல்கள் மற்றும் பட்டாசுகளை பொலிசார் மீது கால்பந்து ரசிகர்கள் வீசியுள்ளனர். சில பகுதிகளில் கூட்டத்தை கலைக்க தண்ணீர் பீச்சியடித்ததாகவும் கூறப்படுகிறது.
கலவரத்தில் ஈடுபட்ட டசின் கணக்கான ரசிகர்கள் கைதாகியுள்ளனர். பிரான்ஸ் மட்டுமின்றி, ஐரோப்பா முழுவதும் தங்கள் அணி தோல்வியை தழுவினாலும் வெற்றி பெற்றாலும் கலவரம் வெடித்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
புதன்கிழமை, மொராக்கோவுக்கு எதிரான உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் வன்முறை மோதல்கள் வெடித்ததில் 14 வயது சிறுவன் கொல்லப்பட்டான்.
பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானதைத் தொடர்ந்து பாரீஸ் நகர தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
இதேப் போன்று, பிரஸ்ஸல்ஸில் ரசிகர்கள் தெருவில் தீ வைத்து, பட்டாசுகளை வீசியதைத் தொடர்ந்து, பொலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தினர். மட்டுமின்றி கலவரத்தில் ஈடுபட்ட டசின் கணக்கானோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்