அன்பார்ந்த தமிழீழ மக்களே.
கடந்த 19.04.2023 புதன்கிழமை அன்று, தமிழீழ தேசியக் கொடி பொறிக்கப்பட்ட மேலங்கியினை அணிந்திருந்தாரென மேற்கொள்ளப்பட்ட வழக்கு, பேர்லின் (Berlin) மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வேளை நீதிமன்றத்தின் கேட்போர் கூடத்திற்குள் அமர்ந்திருந்தவர்களுள் சிறிலங்கா அரச தூதுவராலயத்தின் முகவராக செயற்படும் யேர்மனிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் அமர்ந்திருந்தார். இதனை அவதானித்த மனிதநேயச் செயற்பாட்டாளர் குமணன் அவர்கள் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார். அத்தோடு குறிப்பிட்ட முகவர் ஏற்கனவே நடைபெற்ற ஈழத்தமிழர்களின் கவனயீர்ப்புப் போராட்டங்களில் தகவல்களை சேகரித்து சிறிலங்கா உளவுத்துறையினர்க்கு அல்லது சிறிலங்கா அரசிற்கு வழங்கி இருந்தார் என்பதனையும் குறிப்பிட்டார். வழக்கின் ஆரம்பத்தில் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும் பெயர் விபரங்கள், முகவரினால் சிறிலங்கா அரசிற்கு தெரிவிக்கப்படும் பட்சத்தில் தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கும் ஆபத்து நேரிடும் என்பதனை, முன் அனுபவங்களினூடாக நீதிபதிக்கு தெரிவித்தார். இதன் அடிப்படையில் குறிப்பிட்ட முகவர் குறிப்பு எடுப்பதனை நிறுத்துமாறு நீதிபதியினால் எச்சரிக்கப்பட்டார். சூழ்நிலையின் உண்மைத் தன்மைகளை உணர்ந்துகொண்ட நீதிபதி கேட்போர் கூடத்திற்குள் அமர்ந்திருந்த அனைவரையும் நீதிமன்றத்திற்கு வெளியில் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அனைவரும் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிய பின்பு மனிதநேய செயற்பாட்டாளர் குமணன் அவர்களிடம் நீதிபதியினால் தனிமையில் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதன்பின்பு வழக்கினை வேறொரு திகதிக்கு தள்ளிப்போட்ட நீதிபதி அவர்கள் தமிழீழத் தேசிய கொடி சார்ந்து அரசதரப்பு நிபுணர்கள் வழங்கிய தகவல்கள் மட்டுமன்றி வழமைக்கு மாறாக எமது தரப்பிலிருந்தும் ஒரு நிபுணரை வழங்குவதற்கு நீதிபதியினால் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு தமிழீழ தேசியக் கொடிக்கான தடையினை சட்டரீதியாக உச்சநீதிமன்றம் ஆராய வேண்டுமெனவும் எமது தரப்பு சட்டத்தரணியினால் கேட்டுக்கொள்ளப்பட்டது.
19.04.2023 அன்று இடம்பெற்ற வழக்கின் ஆரம்பகட்டமானது எமக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. ஏனெனில் வழக்குச்சார்ந்து உண்மைத்தன்மைகள் முறையாக ஆராயப்பட்டு, தமிழ்த் தேசிய இன அடையாளம் அங்கீகரிக்கப்படுவதோடு, ஒரு யேர்மன் நீதி மன்றத்தினூடாக ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான நியாயங்களையும் முன்வைப்பதற்கான மிகப்பெரும் வாய்ப்பினையும் ஏற்படுத்தித் தந்துள்ளது.
அன்பார்ந்த தமிழீழ மக்களே, எமது மாவீரர்களது அற்புதமான தியாகங்களினால் நிலைநிறுத்தப்பட்ட தமிழ்த் தேசிய அடையாளச் சின்னங்களை பாதுகாத்து, அவர்களின் இலட்சிய கனவினை நிறைவேற்ற உலகத்தமிழர்களாகிய நாம் இணைந்து செயற்படுவோமென உறுதியெடுத்துக்கொள்வோம்.
” எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை நாம் அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களிற்கு அமைவாகவே செயற்பட்டு வருகின்றோம் ”
தமிழீழ தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
ஈழத்தமிழர் மக்களவை – யேர்மனி