வடக்கு கிழக்கு பிரதேசத்தை சிங்கள பௌத்த பூமியாக்கும் நிகழ்ச்சி நிரல் 2009க்கு பின் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (23.08.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடகிழக்கு தமிழர்களின் தேசியம் காக்க நாடாளுமன்றிலும் வெளியிலும் தொடர்ந்து குரல் கொடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தனிப்பட்ட வீட்டிற்கு முன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பிக்க போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பகிரங்கமாக அறிக்கை விடுத்து பொதுமக்களையும் திரளுமாறு கேட்டு இருப்பது அடிப்படை ஜனநாயக உரிமை மீறும் அநாகரீக, இனவாத, மதவாத அரசியலாகும்
இதனை வன்மையாக கண்டிப்பதோடு கௌரவ அரசியல் செய்யும் செய்ய விரும்பும் அனைத்து கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.
இது அரசியல் ரீதியாக தமது அடையாளத்தை இழந்து கொண்டிருக்கும் கம்பன்பில தாமே சிங்கள பௌத்தர்களின் காவலன், தேசப்பற்றாழன் என மக்கள் மத்தியில் தமது அரசியல் பிம்பத்தை கட்டி எழுப்ப எடுக்கும் ஈனத்தரமான அரசியல் நாடகமாகும்.
தகப்பன் படுகொலை செய்யப்பட்ட நகரிலே தற்போது மகனுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.
இது அவரை ஒத்த அரசியல் கருத்தியல் கொண்ட அனைத்து தமிழர்களுக்குமே அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடாகவே கொள்ளல் வேண்டும்.
தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் குறிப்பாக கஜேந்திரகுமார் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் முன்வைக்கும் அரசியல் கருத்துகளுக்கு அதே பாணியில் பதிலளிக்க திராணியற்றவர்கள் அடிமட்ட மக்களை வீதிக்கு இறக்கி துவேச அரசியலை முன்னெடுக்க நினைப்பது நாட்டின் சாபக்கேடு.
கம்மன்பில போன்றவர்களால் நடத்தும் போராட்டங்கள் மூலம் தமிழர்களின் உண்மை வரலாற்றை; வரலாற்று தொன்மங்களை அழித்தொழிக்க முடியாது. அதேப் போன்று அரசியல் அபிலாசைகளையும் புதைக்கவும் முடியாது.
மீண்டும் அழிவிற்கு வழி வகுப்பவர்களுக்கு மத்தியில் ஜனநாயக ரீதியில் சர்வதேச ரீதியில் ஒடுக்கப்படும் இனங்களோடு எமது குரலையும் இணைத்து கூட்டு செயற்பாட்டினை முன்னெடுப்பதே காலத்தின் தேவையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.