இந்த நாளில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அனைத்துல நீதியினை வலியிறுத்தி,வட தமிழீழம் யாழ் . பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய நாள் (30.08.2023 ) – வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை பல இடங்களிலிருந்து ஒன்றுகூடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் மக்கள் இணைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துல விசாரணையினை வலியுறுத்தி யாழ் பேருந்து தரிப்பிடத்தில் ஆரம்பித்து முனியப்பர் கோயிலடியில் நிறைவு பெற்றது.அத்தோடு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் அறிக்கை ஐ.நா அமைப்புகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக – பொறுப்புக்கூறல் இல்லாமை மற்றும் தண்டனையின்மையால் பாதிக்கப்பட்டவர்களாக – பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்றினூடாக – இந்த குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் இடம்பெறவேண்டும். சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மூலமாகவோ அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினுடாகவோ சிறிலங்கா விசாரிக்கப்படவேண்டும். ஐ.நா மனித உரிமைகள் பேரவை 54 கூட்டத்தொடரை ஆரம்பிக்கவுள்ள நிலையில், தமிழர்களுக்கான நீதி வேண்டி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.