இலங்கையில் தொடரும் மக்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் மீதான கண்காணிப்பு, மிரட்டல், ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் அமைதியான முறையில் போராடுவோருக்கு எதிரான பழிவாங்கல் போக்குகள் மற்றும் அதிகரித்துச் செல்லும் கட்டுப்பாடுகள் குறித்து கவலையடைவதாக இலங்கை தொடர்பான கோர் குழு கவலை வெளியிட்டுள்ளது.
அத்துடன், சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கான அச்சமற்ற மற்றும் பாதுகாப்பான சூழல் உறுதி செய்யப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்தை வலியறுத்துவதாகவும் கோர் குழு தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான கோர் குழுவில் அங்கம் வகிக்கும் கனடா, ஜேர்மனி, வடக்கு மாசிடோனியா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் சார்பில் ஜெனீவாலில் உள்ள ஐ.நா.வுக்கான பிரிட்டனின் தூதர் சைமன் மான்லி நேற்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
இலங்கை குறித்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கைக்காக மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் 46/1 தீா்மானத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான வளங்களை உறுதி செய்யுமாறு அழைப்பு விடுக்கிறோம்.
கொவிட் 19 தொற்று நோயால் இலங்கை கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளது என்பதை நாங்கள் ஏற்று அங்கீகரிக்கிறோம். தொற்று நோயால் இழந்த பல உயிர்களிற்காக இலங்கை மக்களிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். முழுமையான நல்லிணக்க மற்றும் பதிலளிக்கும்கடப்பாட்டு நடைமுறையின் முக்கியத்துவத்தை நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். நல்லிணக்கத்தை ஊக்குவிப்பது காணாமல்போனவர்கள் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவற்றை தொடர்ந்து இயங்கச்செய்வது ஆகியவை குறித்து இலங்கை வெளியிட்டுள்ள நோக்கத்தை நாங்கள் கருத்தில் எடுத்துள்ளோம். இந்த அமைப்புகளின் அரசியல் சுயாதீன தன்மையை உறுதி செய்யுமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம். கவனத்தை ஈர்த்த முக்கிய சம்பவங்களிற்கு பொறுப்புக்கூறுவதில் ஏற்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்திலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறித்து நாங்கள் ஏமாற்றமடைகின்றோம்.
2008-2009 -ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் சமீபத்திய போக்குகள் கவலைக்குரியவையாக உள்ளன.
மனித உரிமை நிலவரம் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம். குறிப்பாக இலங்கையில் தொடரும் மக்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் மீதான கண்காணிப்பு, மிரட்டல், ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் அமைதியான முறையில் போராடுவோருக்கு எதிரான பழிவாங்கல் போக்குகள் மற்றும் அதிகரித்துச் செல்லும் கட்டுப்பாடுகள் கவலைக்குரியதாக உள்ளன. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சுதந்திரமாக பாதுகாப்பாக செயற்படுவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுப்பதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகின்றோம். மனித உரிமை பேரவையின் 47 வது அமர்வில் பொலிஸ் நிலையங்களில் இடம்பெறும் மரணங்கள் குறித்து சுயாதீன பக்கச்சார்பற்ற விசாரணைகள் இடம்பெறவேண்டும் என நாங்கள் விடுத்தவேண்டுகோளை மீண்டும் விடுக்கின்றோம். சர்வதேச சமூகத்தை நோக்கி கரங்களை நீட்டும், இலங்கை அரசாங்கத்தின் முயற்சியும், பயங்கரவாத தடைச்சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையும் வரவேற்கப்பட வேண்டியவை.எனினும் பயங்கரவாத தடைச்சட்டம் குறித்த எங்களின் நீண்ட கால கவலைகள் நீடிக்கின்றன. சர்வதேச கடப்பாடுகளின் அடிப்படையில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகின்றோம். நீதித்துறையின் கண்காணிப்பற்ற விதத்தில் முன்னெடுக்கப்படும் சீர்திருத்த நடவடிக்கையை பயங்கரவாத தடைச் சட்டத்தில் அறிமுகப்படுத்தும் நோக்கத்தை இலங்கை அரசாங்கம் கைவிடவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டத்தரணி ஹெஸாஜ் ஹிஸ்புல்லா, கவிஞர் ஆசிரியர் அஹ்னாவ் ஜசீம் ஆகியோர் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தின்க கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறித்த எங்கள் கரிசனையை வெளிப்படுத்துகின்றோம்.
மனித உரிமைகள் உயர் ஸ்தானிகருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், 46/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவுவதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.