6 மாதங்களில் கொரோனாவுக்கு தடுப்பூசி!

You are currently viewing 6 மாதங்களில் கொரோனாவுக்கு தடுப்பூசி!

எலிகள் மீதான தடுப்பூசி பரிசோதனை முடிவுக்கு வந்ததால், இன்னும் 6 மாதங்களில் கொரோனாவுக்கு தடுப்பூசி கிடைத்துவிடும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூபே மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளை எட்டியுள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலான நாடுகளும் சமூக விலகல் மற்றும் ஊரடங்கை பிறப்பித்து, மக்களை வீட்டுக்குள் இருக்க அறிவுறுத்தி வருகின்றன. இருந்தும், கொரோனா ேநாய் பரவலை கட்டுப்படுத்த மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இன்னும் அதிகாரபூர்வமாக மருந்துகள் கண்டறியப்படவில்லை. இதனால், மருத்துவ உலகத்துக்கு கொரோனா பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், நோய் எதிர்ப்பு நிபுணர் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் மார்ட்டின் பச்மன் கூறியதாவது: கொரோனா தடுப்பூசி ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் வரக்கூடும். வைரஸ்கள் போன்ற காரணிகள் தொற்று இல்லாத தடுப்பூசிகளை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. இந்த துகள்கள் உடலில் தேவையான ஆன்டிபாடிகளை தயார் செய்யும். இது நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. கொரோனா வைரஸ் ஸ்பைக் புரத ஏற்பியுடன் பிணைக்கப்பட்டு, தொற்று பரவ அனுமதிக்கிறது. இந்த ஏற்பி ACE-2 என அழைக்கப்படுகிறது. ஸ்பைக் புரதத்தின் ஒரு பகுதியை மட்டுமே கொண்டு தடுப்பூசி தயாரிப்பதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம், இது ஏற்பி-பிணைப்பு களம் (RBD) என அழைக்கப்படுகிறது.
பெரும்பாலான தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான அடிப்படையில் கொரோனாவுக்கும் தடுப்பூசி கண்டறியப்படும். இந்த தடுப்பூசி எலிகள் மீது சோதனை செய்யப்பட்டுள்ளது.

ACE-2 ஏற்பியின் ஸ்பைக் புரதத்துடன் இணைப்பதைத் தடுக்கிறது. எலிகள் மீதான தடுப்பூசி பரிசோதனையை விஞ்ஞானிகள் முடித்துள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் விரைவில் கொரோனா தடுப்பூசியை வெளியிட உள்ளனர். பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழு கைகோர்த்து செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும், பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் அட்ரியன் ஹில் கூறுகையில், ‘ஆக்ஸ்போர்டு குழு கடந்த 2014ம் ஆண்டு மேற்கு ஆப்ரிக்காவில் ஏற்பட்ட எபோலா தொற்றுநோய் பரவல் ஏற்படும் போது ஏற்பட்ட அனுபவத்தைவிட, தற்போது மிகப்பெரிய சவாலை சந்தித்துள்ளது. விரைவில் தீர்வு கிடைக்கும்’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

4 கோடி மக்களின் உயிர் தப்பியது
கொரோனா வைரஸ் பாதிப்பால் சமூக விலகல், ஊரடங்கு நடவடிக்கை போன்றவற்றை எதிர்ப்பவர்கள், இது உலகப் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தி மக்களை வேலையில்லாமல் ஆக்கும் என்று வாதிடுகின்றனர். ஆனால், லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘உலக மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள் வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்படாமல் இருந்திருந்தால், கொரோனா வைரசால் 40 மில்லியனுக்கும் (ஒரு மில்லியன் 10 லட்சம் – 4 கோடி) அதிகமான இறப்புகளை ஏற்படுத்தியிருக்கும். மேலும் பல பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

இவர்களை பாதுகாக்கவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளால் இறப்பு எண்ணிக்கையை 50 முதல் 95 சதவீதம் வரை குறைக்க முடியும். ஊரடங்கு, சமூக விலகல் மற்றும் முதியவர்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் சுமார் 38 மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள