6G அலைவரிசை! அமெரிக்கா, சீனாவுக்கிடையிலான அடுத்த ஆயுதப்போட்டி!!

You are currently viewing 6G அலைவரிசை! அமெரிக்கா, சீனாவுக்கிடையிலான அடுத்த ஆயுதப்போட்டி!!

அமெரிக்காவுக்கும், சீனாவுக்குமிடையிலான அடுத்த ஆயுதப்போட்டியாக “6G” தொலைத்தொடர்பு அலைவரிசை கணிக்கப்படுகிறது.

தற்போதுள்ள “5G” அலைவரிசை உலகம் முழுவதும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை என்றாலும், அமெரிக்காவும், சீனாவும் அடுத்த அலைவரிசையான “6G” அலைவரிசையை யார் கையகப்படுத்துவது என்ற போட்டியில் ஏற்கெனவே இறங்கியுள்ளன.

“6G” அலைவரிசையை முதன்முதலில் செயற்படு நிலைக்கு யார் கொண்டு வருகிறார்களோ அவர்களே அடுத்த தொழிற்புரட்சியில் வென்றவராக கருதப்பட இடமிருக்கும் நிலையில், மேற்படி இரு நாடுகளுக்குமிடையிலான போட்டி முழு அளவில் முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஒரு வினாடி நேரத்தில் ஒரு “TB / தெரா பைட்” அளவில் தரவுகளை கடத்தக்கூடிய புதிய அலைவரிசைக்கான போட்டியில் அமெரிக்காவும், சீனாவும் தீவிரமான நிலையை கடைப்பிடித்து வரும் நிலையில், 2019 ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் “Trump” இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.

தொலைத்தொடர்பு தரநிலைகளை அபிவிருத்தி செய்யும் “ATIS” என்னும் நிறுவனம், உலகப்புகழ் பெற்ற “Apple”, “AT & T”, “Qual Comm”, “Google” மற்றும் “Samsung” ஆகிய பெருநிறுவனங்களை உள்ளடக்கி ஒரு குழுவை அமைத்துள்ளதன் மூலம், “6G” தொழிநுட்பத்தில் அமெரிக்காவை முந்த வைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.

எனினும், சீனாவின் “Huawei” நிறுவனம் இவர்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கும். ஏற்கெனவே “5G” அலைவரிசைக்கான போட்டியின்போது, பல்வேறுகாரணங்களை காட்டி, “Huawei” நிறுவனத்தை உலக சந்தையிலிருந்து ஒதுக்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் அமெரிக்கா மேற்கொண்டிருந்தாலும் அத்தனையிலும் அமெரிக்கா தோல்வியடைந்ததோடு, “Huawei” நிறுவனம் உலக சந்தையில் தனியான இடத்தை தக்க வைத்துக்கொண்டது. அமெரிக்காவின் தீவிரமான பொருளாதார தடைகளையும் மீறி, உலகளாவிய ரீதியில் “Huawei” நிறுவனம் “5G” அலைவரிசையில் முன்னணியில் திகழ்கிறது.

“6G” அலைவரிசை பரிசோதனைகளுக்காக ஏற்கெனவே செய்மதியொன்றை விண்ணில் ஏவியிருக்கும் சீனா, கனடாவில் ஆய்வகத்தை கொண்டிருக்கும் சீன நிறுவனமான “Huawei” உடன் இணைந்து மிகத்தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

ஐரோப்பாவை பொறுத்தவரை, பின்லாந்தின் “Nokia” நிறுவனமானது, சுவீடனின் “Ericsson” மற்றும் “Telefonica” ஆகிய பெருநிறுவனங்களை இணைத்து “6G” போட்டியில் இறங்கியுள்ளது.

2030 ஆம் ஆண்டில் செயல்முறைக்கு வருமென எதிர்பார்க்கப்படும் “6G” அலைவரிசையானது, தற்போதுள்ள அலைவரிசைகளை பாவித்து மனிதன், “Smart” பாவனைப்பொருட்களோடு தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கும் அப்பால், “Smart” பாவனைப்பொருட்களே தங்களிடையே தொடர்பாடல்களை மேற்கொள்ளக்கூடிய விதமாகவும் அமையும் என்பது விசேடமானது.

பகிர்ந்துகொள்ள