கனடாவில் வசித்துவரும் ஈழத் தமிழரான வரதா சண்முகநாதன் 87வது வயதில் யோர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இணையமூடாக நடந்த பட்டமளிப்பு விழாவில் 87 வயதான வரதா சண்முகநாதனுக்கு, ஒன்ராறியோவின் யோர்க் பல்கலைக்கழகத்தினால், முதுகலைமாணி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
நான்கு பிள்ளைகளுக்கு தாயாரான வரதா சண்முகநாதனுக்கு 7 பேரப்பிள்ளைகளும் உள்ளனர். தற்போது யோர்க் பல்கலைக்கழகத்தில் இருந்து முதுகலை பட்டம் பெறும் மிகவும் வயதான நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இது இவர் பெறும் இரண்டாவது முதுகலை பட்டமாகும்.
இது பெருமைக்குரிய தருணம் என குறிப்பிட்டுள்ள அவரது மகள் பிரியா மெரிட், ஆனால் இதில் எங்களுக்கு ஒன்றும் வியப்பில்லை என குறிப்பிடுகிறார். வாழ்க்கையில் எந்த சாதனைக்கும் வயது ஒரு தடையே அல்ல என தமது தாயார் அடிக்கடி கூறி வந்துள்ளதையும் பிரியா மெரிட் நினைவுப்படுத்தியுள்ளார ஈழத்தில் பிறந்த வரதா சண்முகநாதன் கல்வி மீது கொண்ட தீராத ஆர்வத்தால், பெற்றோர்களின் ஊக்கமளிப்புடன் இந்தியாவில் மேற்படிப்பை முடித்துள்ளார். பின்னர் இலங்கைக்கு திரும்பிய அவர் ஆசிரியர் பணியில் இணைந்தார்.
அங்கேயே தமது வருங்கால கணவரையும் சந்தித்துக்கொள்ள, ஆசிரியர்களான இருவரும் ஆப்ரிக்கா, இங்கிலாந்து என வேலைக்காக புறப்பட்டனர். இந்த காலகட்டத்தில், நாங்கள் வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு காலநிலைகளில் வாழ்ந்தோம் என்று குறிப்பிட்டுள்ளார் வரதா சண்முகநாதன்.
சொந்த நாட்டில் மட்டுமல்ல 1970 காலகட்டத்தில் எத்தியோப்பாவிலும் உள்நாட்டுப் போரின் நெருக்கடிகளை அனுபவித்ததாக குறிப்பிட்டுள்ளார் அவர். காந்தி, தலாய் லாமா மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோரின் போதனைகளுடன் அந்த போர் அனுபவங்களும் இணைந்து, யோர்க்கில் தனது இரண்டாவது முதுகலைப் பட்டத்தை தொடர வழிவகுத்தது என்கிறார் சண்முகநாதன்.
மேலும், ஈழத்திற்கும் சிறீலங்காவுக்கும் போர் மற்றும் அமைதிக்கான வாய்ப்புகள் குறித்து அவர் தனது ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். மட்டுமின்றி, இதுவரையான தமது வாழ்க்கை அனுபவங்களை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடவும் வரதா சண்முகநாதன் திட்டமிட்டு வருகிறார்.