9ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் Strasbourg, France மாநகரத்தினை வந்தடைந்தது.
இன்று 16.02.2021 , Phalsbourg மாநகரசபையில் இருந்து மனித நேய ஈருருளிப்பயணம் தாயகத்திற்காக தம் இன்னுயிரை ஈந்தவர்களுக்கான அகவணக்கத்தோடு ஆரம்பமானது. அகவணக்கத்தில் Phalsbourg மாநகரசபை முதல்வரும் கலந்து கொண்டார். பின்னர் எமது கோரிக்கை அடங்கிய மனுவும் கையளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக மனித நேய ஈருருளிப்பயணம் Savren மாநகரசபையினை நோக்கி காவற்துறையின் வழித்துணையுடன் விரைந்தது.
அங்கே உதவி முதல்வரினையும் சந்தித்து இக்கால கட்டத்தில் எமது இலக்கின் முக்கியத்துவம் என்ன என்பது பற்றியும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை அவசியம் என்பதனையும் அதற்காக பிரான்சு நாடு குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை மனு கையளிக்கப்பட்டது. அத்தோடு தொடர்ச்சியாகவே எமது அறவழிபோராட்டத்தினை சீர்தூக்கும் Savern மாநகரசபை இம்முறையும் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் அது தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையும், சுதந்திர தமிழீழ தேசம் தான் என நிச்சயம் பிரான்சு வெளிவிவகாரத்துறைக்கும் அரச அதிபருக்கும் வலியுறுத்துவோம் என வாக்குறுதி தரப்பட்டது.
பின்னர் Strasbourg மாநகரசபையில் எமது கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டு ஐரோப்பிய ஆலோசனை அவை, ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக பயணித்து Place Kléber எனும் இடத்தில் Strasbourg வாழ் மக்களால் எழுச்சியோடு ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் மனிதநேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
எமது நியாயமான தீர்வினை பெற்றுத்தர சர்வதேசம் விழிப்புற வேண்டும் எனவும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே தமிழர் தேசம் எனவும் தம் வேணவாவினை பல்லின வாழ் மக்களுக்கு பதாதைகள் மூலம் கைகளில் ஏந்திய படி எடுத்துரைத்தனர்.
நேற்றைய் தினம் (15.02.2021) Saargumine மாநகரசபையில் இடம் பெற்ற சந்திப்பினை “Ville de sarregumine” எனும் முகநூல் பக்கத்திலும் Saargumine மாநகரசபை பதிவு செய்திருந்தார்கள். மற்றும் « Rebublicain Lorraine » எனும் பத்திரிகை ஊடகமும் மனிதநேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை 17.02.2021 மீண்டும் எமது இலக்கு நோக்கி பயணிக்க உறுதிபூண்டு இயற்கை மற்றும் மாவீரர்களின் துணையோடு பயணிக்க இருக்கின்றோம்.
“மக்கட் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்