கொரோனாவைரசு பல நாடுகளில் பாரிய உயிரிழப்புகள் மற்றும் நெருக்கடிகளை உருவாக்கிக் கொண்டுவருகிறது. இத் தொற்றுநோயினை கட்டுப்படுத்த பல நாடுகள் சிரமப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், சில நாடுகள் இந்த அவசரநிலையைத் திறமையாக கையாண்டுவருகின்றன. அவற்றில் சில பெண்கள் ஆட்சி செய்யும் நாடுகளாகும்.
பெண்கள் தலைமையில் இயங்கிக்கொண்டு இருக்கும் ஜேர்மனி, பின்லாந்து, டென்மார்க், நோர்வே, ஐசுலாந்து, நியூசிலாந்து, தைவான் ஆகிய நாடுகளே இந்த தொற்றுநோயை எதிர்த்து மிகச் சிறப்பாக வெளியேறி வருகின்றன.
தைவான் மற்றும் நியூசிலாந்து தொற்றுநோயின் மையப்பகுதிக்கு மிக அருகில் உள்ள மற்றும் கூடிய ஆபத்துக்கு உள்ளாகும் சிறிய நாடுகள். ஆனால், இந் நாடுகளின் பெண் ஆட்சியாளர்களின் திறம் வாய்ந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் மிக விரைவில் அவசர நிலையில் இருந்து வெளியேறியுள்ளன.
தைவான் – Tsai Ing Wen
ஆஸ்திரேலியாவைப் போலவே, 24 மில்லியன் மக்கள் தொகை கொண்ட தைவானின் கொரோனாவைரசுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றி அதன் வெளிப்படைத்தன்மை, தொற்றுநோய் கண்காணிப்பு, அதிகாரிகளின் விரைவான செயல்பாடுகள் மூலம் வெளிப்படுகிறது.
தைவானில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த 124 நடவடிக்கைகள் சனாதிபதி மற்றும் முற்போக்குவாதி Tsai Ing Wen ஆல் உடனடியாக முன்னெடுக்கப்பட்டன. இத் திறன் மிக்க நடவடிக்கைகளால் நாட்டின் முடக்குநிலை மற்றும் சமூக இடைவெளி போன்றவை தவிர்க்கப்பட்டன. தற்போது இந்த நாடு உலகம் முழுவதும் முக கவசங்களை ஏற்றுமதி செய்துவருகிறது. அத்துடன், ஐரோப்பாவுக்கு 100 மில்லியன் முக கவசங்கள் நன்கொடை அளித்துள்ளது.
நியூசிலாந்து – Jacinda Ardern
நியூசிலாந்தில் தொற்றுக்கு உள்ளாகிய நபர்கள் 6 ஆக இருக்கும் போதே பிரதமர் Jacinda Ardern கடுமையான விதிமுறைகளை நடைமுறைப் படுத்தினார்: நாட்டுக்குள் உள்நுழைவோர்கள் மற்றும் தொற்றுக்குள்ளானவர்கள் கட்டாய தனிமைப்படுத்துதலில் இருத்தல்; நோயாளிகளின் தொடர்புகள் மற்றும் கண்காணிப்பு போன்றவை அவசியமானதாக இருந்தன.
தற்போதுவரை நியூசிலாந்தில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆகவே உள்ளது.
நோர்வே – Erna Solberg
BBC யின் அறிக்கையின் படி covid-19 இனால் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து முதலில் வெளியேறும் நாடாக Erna Solberg தலைமையில் இயங்கும் நோர்வே உள்ளது. 20 ஏப்ரல் அனைத்து பாலர் பள்ளிகளும் முதலில் திறக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், உலகிலேயே முதன் முறையாக கொரோனாவைரசு பற்றி குழந்தைகளுக்கு விளங்கப்படுத்த தொலைக்காட்சியூடாக சந்திப்பு ஏற்படுத்திய முதல் பிரதமர் இவரே ஆவார்.
டென்மார்க் – Mette Frederiksen
ஒரு மாத முடக்க நிலையைத் தொடர்ந்து பள்ளிகளை மீண்டும் திறந்துள்ளார் டென்மார்க் பிரதமர் Mette Frederiksen. மேலும், ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இருந்து நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
பின்லாந்து – Sanna Marin
பின்லாந்தில், நோயின் ஆரம்ப காலத்திலே நாட்டின் பிற பகுதிகளுக்கு தொற்றுநோயை பரவாமல் தடுக்க அதிக மக்கள் தொகை கொண்ட தலைநகர் Helsinki ஐ சிவப்பு வளையமாக மாற்றியுள்ளார் பிரதமர் Sanna Marin. டிசம்பரில் பிரதமராக நியமிக்கப்பட்டு உடனடியாக ஒரு உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொண்டு வரும் இளம் பிரதமரின் மிகச் சிறந்த நடவடிக்கைகளில் இது ஒன்றாகும்.
ஐசுலாந்து – Katrín Jakobsdóttir
வெறும் 360 ஆயிரம் மக்களைக் கொண்டிருக்கும் ஐசுலாந்தில் பிரதமர் Katrín Jakobsdóttir அனைவருக்கும் இலவச நோய்ப் பரிசோதனை வழங்கினார். மேற்க்கொள்ளப்பட்ட பரிசோனைகளால் நோயுற்றவர்களில் பாதி நபர்கள் அறிகுறியற்ற நோயாளிகள் என்பதைக் கண்டறிய அவரது நடவடிக்கை வழிவகுத்தது. மேலும், அறிகுறியற்ற நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டதோடு, எந்தவொரு மூடுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
ஜேர்மனி – Angela Merkel
ஜேர்மனியின் பிரதமர் Angela Merkel “ 70% விகிதமான ஜேர்மனிய மக்கள் இந்த வைரசுக்குள்ளாவார்கள்” என்று சனவரி மாத ஆரம்பத்திலே கூறியிருந்தார். மேலும், அந் நாட்டின் திடமான சுகாதார அமைப்பு, தீவிர தொற்றுப் பரிசோதனைகள் மற்றும் ஐரோப்பாவிலே கூடியளவு தீவிர சிகிச்சைப் பிரிவுகள் கொண்டுள்ள நாடாக இருப்பதால் நோயாளிகளை இலகுவாக கையாள முடிகிறது. மேலும், இத்தாலி மற்றும் பிரான்சு நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறது.
இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான வழிமுறைகளை தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால், அவர்கள் ஆட்சி செய்யும் நாடுகளின் யதார்த்தத்தின் அடிப்படையில் சரியான நேரத்தில் மற்றும் நியாயமான, அவசியமான முடிவுகளை மேற்கொண்டனர்.
அவர்கள் இந்த அவசரநிலைமையின் கட்டுப்பாட்டை இழக்கவில்லை. எனவே, சிறந்த தலைமைத்துவ குணங்கள் பெண்களுக்குள் இருப்பது இதிலிருந்து தெரிகிறது.