ரஷ்யாவுடனான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக, “F – 16” இரக போர்விமானங்களை வழங்குமாறு கோரி, ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயமொன்றை உக்ரைனிய அதிபர் “ஷெலென்ஸ்கி” மேற்கொண்டுள்ளார்.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் அதிபர்கள் / பிரதமர்களை அந்தந்த நாடுகளில் சந்தித்துள்ள உக்ரைனிய அதிபர், கனரக ஆயுதங்களையும், நவீன போர்விமானங்களையும் வைத்திருக்கும் ரஷ்ய இராணுவத்தை எதிர்த்து காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமாயின், அமெரிக்காவின் “F – 16” இரக போர்விமானங்கள் தேவை என்றும் குறைந்தது 40 விமானங்களாவது தனக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் ஐரோப்பிய நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய – உக்ரைன் மோதல்கள் தொடங்கிய கலப்பகுதியிலேயே இவ்வாறான போர்விமானங்களை உக்ரைன் கோரியிருந்தாலும், இவ்வகை விமானங்களை வைத்திருக்கும் “நேட்டோ” நாடுகளில் அநேகமானவை உக்ரைனின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி போர்விமானங்களை உக்ரைனுக்கு வழங்கும்போது, ரஷ்ய – உக்ரைனிய விவகாரத்தில் இந்நாடுகள் நேரடியாக தலையிடுவதாகவே அது கருதப்படும் என்பதால், ரஷ்யாவுடனான போரொன்றுக்கு அது வழிவகுத்துவிடுமென இந்நாடுகள் கருதுவதாகவும், எனினும் ஒருசில நாடுகள் போர்விமானங்களை உக்ரைனுக்கு வழங்க இணக்கம் தெரிவித்தாலும் பெரும்பான்மையான “நேட்டோ” நாடுகள் இதற்கு ஒப்புதலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தவிரவும், “F – 16” இரக போர்விமானங்களுக்கான நீண்ட ஓடுபாதைகளை உக்ரைன் கொண்டிருக்காததும், இவ்வகை விமானங்களை உரிய முறையில் பராமரிக்கும் வல்லமையையோ அல்லது இவ்வகை விமானங்களை செலுத்தும் பயிற்சி பெற்ற விமானிகளோ உக்ரைனிடம் இல்லை என்பதும் சிக்கல்களாக இருக்கும் நிலையில், இவ்விமானங்களை உக்ரைனுக்கு வழங்கும் நாடுகள், இவ்விமானங்கள் தொடர்பில் உக்ரைன் எதிர்நோக்கும் சிக்கல்களையும் தீர்த்து வைக்கவேண்டிய பொறுப்பையும் ஏற்க நேரிடும் என்பதோடு, இது மிகப்பெரும் பொருள் மற்றும் ஆளணிச்செலவையும் இந்நாடுகளுக்கு ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே “F – 16” இரக போர்விமானங்களை உக்ரைனுக்கு வழங்குவது சாத்தியமில்லையென அமெரிக்க அதிபர் தெரிவித்திருந்த நிலையில், “நேட்டோ” கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களால், அமெரிக்க அதிபரை இவ்விடயத்தில் ஒரு இணக்கப்பாட்டுக்கு கொண்டுவரமுடியுமென உக்ரைனிய அதிபர் நம்புவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, உக்ரைனிய அதிபர் இதுவரை சந்தித்த ஐரோப்பிய நாடுகள், குறித்த “F – 16” இரக விமானங்களை தமது சொந்த விமானப்படையில் கொண்டிருக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்க விடயமாக இருக்கையில், மேற்படி விமானங்களை உக்ரைன் பெறுவது, அமெரிக்க வெள்ளைமாளிகையின் முடிவிலேயே தங்கியுள்ளதென இந்நாடுகளின் தலைவர்கள் நாசூக்காக கருத்துரைத்திருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.