பிரபல சமூகவலைத்தள நிறுவனமான “Facebook” நிறுவனம் கையாண்டுவரும் “தரநிலை” வரையறைகள் (Community Standards) கடந்த காலங்களில் பயனாளர்களிடையே பெரும் விசனங்களை தோற்றுவித்து வந்துள்ள நிலையில், குறித்த நிறுவனம் மிக இரகசியமாக வைத்திருந்த நீதிக்கு புறம்பான இவ்வாறான தரநிலை வரையறை இப்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
பயனாளர்களுக்கான, அனுமதிக்கப்பட்ட தரநிலை வரையறைகள் (Community Standards) என்ற தரத்துக்கு உட்படாத பதிவுகள் நீக்கப்படுவதிலும், அவ்வாறான பதிவுகளை இடும் பயனாளர்கள் முடக்கப்படுவதிலும் கடந்த காலங்களில் பயனாளர்கள் குறித்த நிறுவனத்தின் மீது கடும் அதிருப்திகளை தெரிவித்து வந்துள்ள நிலையில், குறித்த நிறுவனத்தின் பொறுப்பான பதவியை வகித்துவரும் ஒருவர், “Wall Street Journal” நிறுவனத்துக்கு அளித்திருக்கும் ஆவணமொன்று, “Facebook” நிறுவனம், தனது பயனாளர்கள் தொடர்பில் நீதிக்கு புறம்பான இரட்டை நிலையை கையாண்டு வந்தமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத குறித்த நபர் அளித்திருக்கும் ஆவணத்தின்படி, “Facebook” நிறுவனம் தனது பயனாளர்களை தரம்பிரித்து வைத்திருப்பதாகவும், சாதாரணமான தரத்தில் இருக்கும் பயனாளர்கள் இடும் பதிவுகளை, தரநிலை வரையறைக்குள் அடங்கவில்லையென காரணம் காட்டி அவற்றை அகற்றியும், பயனாளர்களை தடை செய்தும் வரும் இந்நிறுவனம், உயர்நிலை தரத்தில் வைக்கப்பட்டிருக்கும் மிகமுக்கியமான பயனாளர்கள் விடயத்தில் இவ்வாறான நடைமுறைகளை கடைப்பிடிப்பதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக பயனாளர்கள் இடும் பதிவுகளை, “Cross-Check (XCheck)” முறையில் தரநிலை பகுப்பாய்வுக்கு “Facebook” நிறுவனம் உட்படுத்துவதாகவும், எனினும் உயர்தரவரிசையில் வைக்கப்பட்டிருக்கும் மிகமுக்கியமான பயனாளர்களுக்கு இவ்வாறான பகுப்பாய்வு ஏதும் செய்யப்படுவதில்லை எனவும் “Wall Street Journal” தெரிவித்துள்ளது. இதனால், உயர்தர நிலையில் வைக்கப்பட்டுள்ள மிகமுக்கியமான பயனாளர்கள் தங்கள் விரும்பிய எவ்விதமான பதிவுகளையும் தடையேதுமில்லாமல் பதிவேற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், அதேநேரம் சாதாரண பயனாளர்கள் மிகுந்த கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இவ்விடயம் தொடர்பாக அமெரிக்க உயர்மட்டத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கும் “Wall Street Journal” நிறுவனம், குறித்த தகவலை வெளியிட்டுள்ள “Facebook” நிறுவனத்தின் பணியாளர், தனக்கான பாதுகாப்பு முழுமையாக வழங்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.