டென்மார்க்கில் தோன்றியுள்ள “Meetoo” பாலியல் குற்றச்சாட்டுக்களால், அந்நாட்டின் பிரதமர் “Mette Fredriksen” கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது கட்சிக்குள்ளும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இருந்ததமையை தான் அறிந்திருந்ததாக தெரிவிக்கும் பிரதமர், குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சரியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தான் தவறியிருப்பதாகவும் ஒத்துக்கொண்டுள்ளார்.
அரசாங்க கட்சியை சேர்ந்த முன்னணி அரசியல்வாதிகள் மீது கடந்த வாரத்தில் முன்வைக்கப்பட்டிருந்த பாலியல் குற்றச்சாட்டுக்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக டென்மார்க்கின் தலைநகரின் மேயர் தனது பதவியை துறக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருந்தார். தனது கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள்மீது பாலியல் தொந்தரவு செய்தாரென மேயர் மீது குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம், டென்மார்க்கின் புகழ் பெற்ற ஊடக நெறியாளரான “Sofie Linde” என்ற பெண்மணி, டென்மார்க்கின் ஊடகத்துறையில் “Meetoo” பாலியல் வக்கிரங்கள் நிறைந்துள்ளதாக பகிரங்க குற்றச்சாட்டொன்றை விடுத்திருந்ததை அடுத்து இப்பிரச்சனை டென்மார்க்கில் கொதி நிலையை அடைந்துள்ளது.
குறித்த ஊடக நெறியாளரின் குற்றச்சாட்டை அடுத்து ஒவ்வொருவராக பொதுவெளிக்கு வந்த பல பெண்கள், தத்தமது துறைகளில் தமது மேலாண்மை பதவிகளிலிருக்கும் ஆண்களால் தமக்கு இழைக்கப்பட்ட பாலியல் வக்கிரங்கள் தொடர்பில் தொடர்ந்து பொதுவெளிகளில் முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர். இவர்களில், பெண் அரசியலாளர்களும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.
“Meetoo” குற்றச்சாட்டுக்களை பொதுவெளியில் விவாதப்பொருளாக்கிய “Sofie Linde” என்ற ஊடக நெறியாளருக்கு பாராட்டு தெரிவித்திருக்கும் டென்மார்க்கின் பிரதமரும் ஏனைய அரசியலாளர்களும், குறித்த பெண்மணியின் முயற்சியாலேயே பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளான ஏனையோர் பொதுவெளிக்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அரசியல் கட்சிகளுக்குள் நடைபெற்றதாக கூறப்படும் பாலியல் தொந்தரவுகள் தொடர்பாக, “TV 2” என்ற டென்மார்க் தொலைக்காட்சி ஒரு விவரணத்தை ஒளிபரப்பியிருந்தது. 2011 இலிருந்து 2018 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் டென்மார்க்கின் அரசியல் கட்சிகளின் இளையோர் பிரிவுகளில் நடந்ததாக சொல்லப்படும் பாலியல் தொந்தரவு தொடர்பான குறித்த தொலைக்காட்சி விவரணத்தில், 7 பேர் வெளிப்படையாக தமது அனுபவங்களை சொல்லியிருந்ததோடு, 14 – 19 வயதுக்கிடைப்பட்ட 54 பேர் தங்களது அனுபவங்களையும் தெரிவித்துள்னர்.
டென்மார்க்கின் வெளியுறவுத்துறை அமைச்சரான “Jeppe Kofod”, 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற அவரது கட்சியின் கலந்துரையாடலின் பின்னதாக, 15 வயதே ஆகியிருந்த இளவயது கட்சி உறுப்பினரான சிறுமி ஒருவரோடு படுக்கையை பகிர்ந்து கொண்டிருந்தார் எனவும் இப்பொது தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தை ஒத்துக்கொண்டிருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர், இப்போது காவல்துறையின் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படவுள்ளார்.
விவரணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் பெரும்பாலானவை அப்போதைய காலகட்டங்களில் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தாலும் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்: https://www.vg.no/nyheter/utenriks/i/R9RWG8/danmarks-statsminister-om-ny-metoo-boelge-jeg-har-ikke-gjort-min-oppgave-som-leder-godt-nok