2009 வரை நிமிர்வோடு நின்ற ஈழவிடுதலை 2009 இற்கு பிற்பாடு இன்னும் இடிபாடுகளுக்குள் அகப்பட்ட மனிதனின் நிலையாய் சிதைந்துபோய் இருப்பதற்கான காரணங்களை உலகநாடுகளுக்குள் தேடமுன் தமிழர்களாகிய எங்களுக்குள் தேடிப்பார்ப்பதும் அதற்கான தீர்வை தனிமனிதர்களாக எங்களுக்குள் தேடிப்பார்ப்பது அவசியமாகின்றது.
இக்காரணங்களை அடிக்கடி இரைமீட்டிப்பார்ப்பதும் முக்கிய தேவையாகவும் இருக்கின்றது ஏனெனில் சிலவேளைகளில் நாங்கள் யார்? நாங்கள் எதற்காக ஏதிலிகளாக வந்தோம்? எங்கள் தாய்மண்ணின் தேவை என்ன? என்பதை மறந்துவிடுகின்றோம் அல்லது மறக்க முயற்சிக்கின்றோம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த நிலையில்தான் எங்களை நாங்களே ஆய்வு செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் இக்கட்டுரையை எழுத முனைகின்றேன் அந்தவகையில் உளரீதியாக எதிரியால் எவ்வாறெல்லாம் பிரிக்கப்பட்டு அவனின் அரசியல் விதைப்பின் நாற்றுகளாக எங்கள் சமூகம் எனும் தோட்டத்திலே களைகளாக வளர்ந்துகொண்டு இருக்கின்றோம் என்பதையும், தமிழின விடுதலை என்ற புனிதமரத்தினை வளரவிடாது தடுக்கின்றோம் என்பதையும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீர்தூக்கிப்பார்கவேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம்.
சரி விடயத்திற்கு வருவோம்
2009ஆம் ஆண்டிற்கு முன்பு தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் தீர்க்க தரிசனத்தோடு உலகம் முழுவதும் தமிழீழத்தின் விடியலுக்காய் வலுவோடு உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் விடுதலைப்போராட்டத்திற்கு இராணுரீதியாக மட்டும் பலப்படுத்துவதற்கு உருவாக்கப்படவில்லை மக்களை பாதுகாப்பதற்கும் அரசியல் ரீதியாக சர்வதேச தொடர்பாடலை வைத்திருப்பதற்காகவும் சுருக்கமாக சொல்லப்போனால் தமிழீழ அரசின் தூதரகங்களாக இயங்கியது என்று சொன்னால் அது மிகையாகாது இதுவே எதிரிகளுக்கும் உதிரிகளுக்கும் சவாலாகவும் இருந்தது.
இந்த கட்டமைப்பின் வலுவோடுதான் தமிழீழவிடுதலைப்புலிகளால் முப்படைகளையும் கட்டியமைக்க முடிந்தது.
இது இப்படி இருக்க 2009 இல் விடுதலைப்புலிகள் அமைதியாகிய பிற்பாடு எதிரியின் அடுத்த இலக்கு இந்த உலகக்கட்டமைப்பாக இருந்தது என்பதை யாரும் மறுக்கவுமுடியாது ஆனால் உலகத்தமிழர்களாகிய நாங்கள் என்ன செய்திருக்கவேண்டும் எதிரியின் சதிவலைக்குள் அகப்படாது உலகக்கட்டமைப்பை பாதுகாத்திருக்கவேண்டும் செய்தோமா? இல்லை மாறாக இந்த கட்டமைப்புகளுக்குள் இருந்து தலைவரின் சிந்தனையை அவரின் அருகில் சென்று பெற்றவர்களே கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாய் அவரின் சிந்தனைகளை காலில்போட்டு மிதித்துவிட்டு ஆளுக்கொரு அமைப்புகளை உருவாக்கி பிராந்திய வல்லரசுகளோடும் மேற்கத்தேய சிந்தனைகளோடும் கரம்கோர்த்து எம்மினத்தின் விடுதலையை விலைபேசி விற்க துடிக்கின்றார்கள்.
இன்னும் சிலரோ குறுநிலமன்னர்கள் சிந்தனையோடு வாழப்பழகிக்கொண்டார்கள்.
இங்கேதான் எமது பலவீனத்தின் பக்கங்களை சில மக்கள் கூட்டங்களாக வகைப்படுத்தி அதற்குள் இருக்கும் நன்மை தீமைகளை வெளிப்படையான கருத்தியலாக இங்கே பதியலாம் என நினைக்கின்றேன்.
அந்தவகையில்
முதலாவது மக்கள் கூட்டம்: தான் தனது குடும்பம் தன் வேலை என்ற வட்டத்துக்குள் வரையறையை வகுத்துக்கொண்டு தனக்கு நெருப்பு சுடாதவரைக்கும் வாழ்கையை கடக்கலாம் எனவும் பிறந்தோம் இறந்தோம் என்ற எல்லைக்குள் நின்றுவிடலாம் எனவும் எண்ணுகின்றார்கள்.
இரண்டாவது மக்கள்கூட்டம்: முதலாவது கூட்டம் போல் இருந்து கொண்டு சற்று வெளியே தலையைக்காட்டி இப்போது இருக்கும் சமூக ஊடகங்களின் வசதிகளைப்பயன்படுத்தி தம்மை சமூகப்போராளிகள் போல் மாயையை உருவாக்கி பொதுவெளிகளில் எந்த தூரநோக்கு சிந்தனைகளும் அற்று முரண்பாடுகளை உருவாக்குவதில் தம்மை வல்வர்களாக காட்டமுனைவதில் எத்தணிப்பதோடு அற்பணிப்பு என்ற அறமே இல்லாது இருக்கின்றார்கள், இந்த எழுத்துச்சொல் வீரர்களால் குழப்பத்தை மக்கள் மத்தியில் உண்டு பண்ண முடிகின்றதே தவிர வேறு ஆணி ஒன்றையும் பிடுங்க முடியவில்லை.
மூன்றாவது மக்கள் கூட்டம்: தமிழ்த்தேசியம் என்ற முகத்தை காட்டியவாறு தங்கள் நாற்காலிகளை தக்கவைத்துக்கொள்வதற்காக அல்லது அற்ப சொற்ப ஆசைகளை திரட்டிக்கொள்வதற்காக தமிழ்த்தேசிய வேரை கறையான்கள்போல் நாளாந்தம் அரித்துக்கொட்டுகின்றார்கள் குறிப்பாக சொல்லப்போனால் பிராந்திய வல்லரசின் அபிலாசைகளையும் மேற்கத்தேய சுய அரசியலையும் பலப்படுத்தும் நிகழ்சிநிரலுக்குள் வீழ்ந்துகிடக்கின்றார்கள்.
நான்காவது மக்கள் கூட்டம்: தாய்மண்ணின் விடுதலைக்காகவும் பல்லாயிரக்கணக்கில் விதையாய் வீழ்ந்த மாவீரர்களின் கனவுக்காகவும் 2009 இற்கு முன்பும் பின்பும் தளராது அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் சவால்களுக்கு மத்தியிலும் சேறுபூசுதல்களுக்கு மத்தியிலும் நன்றியுணர்வோடு விடுதலைக்கான கருத்தியலை சாகவிடாது பயணித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
அய்ந்தாவது மக்கள் கூட்டம்: நேரடியாக வலிகளையும் சாவுகளையும் சந்திக்காதபோதும் இனமான உணர்வோடு தமிழரின் வீரத்தையும் தியாகத்தையும் வலிகளையும் தங்கள் வலிகளாக தோளில் சுமந்து தமிழின விடுதலை ஒன்றே தீர்வென முழக்கத்தை முன் வைத்து தமிழகத்திலிருந்து கருத்தியலை உயிர்ப்போடு கொண்டுசெல்கின்றார்கள்.
இப்படித்தான் தமிழ்த்தேசிய விடுதலைப்பாதையில் மக்கள் கூட்டம் புரையோடிக்கிடக்கிறது.
இந்த மக்கள் கூட்டம் தெளிந்த நீரோடையாக ஓடாத வரை வாறவன் போறவன் எல்லாம் குப்பைகளைப்போடத்தான் செய்வான் ஆகவே இந்த நீரோடையை குடிநீராக்குவதற்கு அழுக்குகளை அகற்றவேண்டுமே தவிர துர்நாற்றம் வீசவிடக்கூடாது.
தமிழ்முரசத்திற்காக
-தூயவன்-