தண்டனை விலக்கு வழங்க ஐ.நா. ஒப்புதலை எதிர்பார்க்கிறாரா ஜனாதிபதி? – கஜேந்திரகுமார் கேள்வி!

You are currently viewing தண்டனை விலக்கு வழங்க ஐ.நா. ஒப்புதலை எதிர்பார்க்கிறாரா ஜனாதிபதி? – கஜேந்திரகுமார் கேள்வி!

பாதுகாப்புப் படைகளுக்கு தண்டனை விலக்கு வழங்கும் நடவடிக்கைக்கு ஐக்கியநாடுகள் சபை ஒப்புதல் வழங்க வேண்டும் என ஜனாதிபதி எதிர்பார்க்கிறாரா? என கஜேந்திரகுமார் எம்பி நேற்று பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார்.

ஐநா பொதுச் சபையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோக் நகருக்குச் சென்றிருக்கும் சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச, கடந்த ஞாயிறன்று ஐநா செயலாளர் நாயகம் அன்ரனியோ குட்டர்ஸ்சை சந்தித்தார். அச்சந்திப்பின் அவர் வெளியிட்ட கருத்துகளுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது எதிர்ப்பினை வெளியிட்டுளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, ஜனாதிபதியின் கருத்துகளுக்கு தனது பலத்த கண்டனத்தை வெளியிட்டார்.

அவரது பாராளுமன்ற உரை விபரம் வருமாறு,

கடந்த ஞாயிறன்று ஐநா பொதுச்செயலாளரைச சந்தித்த பின்னர் ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் பற்றி வெளிநாட்டமைச்சு ஒரு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனைகளை உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையினூடாக தீர்த்துக்கொள்ளமுடியும் எனவும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகளுக்கும் அழைப்புவிடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஐனாதிபதி நியுயோர்க் நகருக்குச் சென்று இதனைத் தெரிவித்திருப்பது எனக்கு வேடிக்கையானதாகத்தெரிகிறது.

ஏனெனில் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த சில தினங்களிலேயே புலம்பெயர் நாடுகளில் செயற்படும் பல தமிழ் அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அல்லது தடைசெய்யப்பட்ட அமைப்புகளாகப் பட்டியிலிட்டிருப்பதாக அறிவித்தது. அது மட்டுமல்லாமல் புலம்பெயர் சமூகத்தில் நன்கு மதிக்கப்படும் பல தனிநபர்களை, குறிப்பாக இவ்வாறான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுவதற்குத் தகுதிவாய்ந்தவர்களும் இப்பட்டியலில் இணைக்கப்பட்டனர்.

எதிர்காலத்தில் அர்த்தபூர்வமான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறமால் பார்த்துக் கொள்வதற்காகவே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பதவிக்கு வந்து சில நாட்களில் இந்நடவடிக்கையை மேற்கொண்ட அரசாங்கம் இப்போது நியுயோர்க்குக்குச் சென்று இவ்வாறு தெரிவிப்பது எவ்வித அர்த்தமுமற்ற வெற்று வார்த்தைஜாலமாகவே தென்படுகிறது.

அது மட்டுமல்ல, காணமற்போனவர்கள் இறந்துவிட்டதாக மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும், இந் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

அது எந்த நடவடிக்கை? நியுயோர்க்குக்குச் செல்வதற்கு முன்னர், பழையவற்றை மறந்து விடுங்கள். உங்களுடைய அன்புக்குரிவர்களை தேடுவதில் காலத்தை வீணடிக்காதீர்கள் என்று காணமற்போனவர்களின் உறவினர்களுக்கும், அவர்களைப் பிரதிநிதித்துப்படுத்துகிற அமைப்புகளுக்கும் தெனாவட்டுடன் கூறியிருக்கிறார். அவ்வாறாயின் இப்போது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? காணாமற் போனவர்கள் என்ன காரணங்களுக்காக பாதுக்காப்புப்படையினரால் கொல்லப்பட்டார்கள்? என்பதைனை விசாரிக்கமால், வெறுமனே மரணச் சான்றிதழ்களை விநியோகிக்கப் போகிறார். இவ்வாறு பாதுகாப்புப் படைகளுக்கு தண்டனை விலக்கு வழங்கும் நடவடிக்கைக்கு ஐக்கியநாடுகள் சபை ஒப்புதல் வழங்க வேண்டும் என ஜனாதிபதி எதிர்பார்க்கிறார். இந்நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவு வழங்குமேயானால், அதனை எந்தவித தயக்கமுமின்றி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் நாம் எதிர்புத் தெரிவிப்போம். ஏனெனில் இது ஐநா சபையின் எல்லாவிதமான கொள்கைகளுக்கும் முரணானது. அவ்வாறு ஐ.நா.சபை நடந்துகொள்ளுமேயானால் இது வரலாற்றில் தவறானதாகவே பதியப்படவேண்டியது.

தமிழ் அரசியற் கைதிகளை விடுவிப்பது தொடர்பிலும் ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருக்கிறார். தாம் ஆட்சிக்கு வந்த சில நாட்களில் ஒரு தொகையானவர்களை விடுவித்திருப்பதாகவும், மீதமுள்ளவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர் எனவும் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒருவருடத்திற்குள் விடுதலையாக இருந்தவர்களே. இதில் வழமைக்கு மாறாக சிறப்பாக எதனையும் அவர்செய்யவில்லை. உயர் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட அவரது சகா ஒருவரை மன்னிப்பளித்து விடுவிப்பதற்காக, சில தமிழ்ப் பெயர்களையும் இணைத்து அவர்களும் விடுவிக்கப்பட்டார்கள். ஆனால், அவர்கள் தண்டனை அனுபவித்து வந்தவர்கள், ஒரு வருடகாலத்தில் விடுதலையாக விருந்தவர்கள். அதுதான் உண்மை. அனைத்துலக அரங்கத்தில் தங்களுக்கு மதிப்பை ஏற்படுத்தவதற்காக இவ்விதமான அறிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் இவை வெறுமையான அறிவிப்புகளே.

இத்தாலியிலுள்ள பொலொனிய நகரத்தில் நடைபெற்ற ஜீ20 நாடுகளின் சர்வமத மாநாட்டில், வெளிவிவகார கொள்கை தொடர்பாக உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரீஸ் அவர்கள் , ஜனாதிபதியின் அறிவிப்புகளை மிஞ்சும் வகையில் நடந்திருக்கிறார். முன்னர் நான் சட்ட மாணவனாக இருந்த காலத்தில் இவர் எழுதிய புத்தகங்களை படித்திருக்கிறேன். இவர் அரசியலுக்கு வருமுன்னர் எனக்கு இவர் மீது மிகுந்த மரியாதையிருந்தது. ஆனால். துரதிர்ஷ்டவசமாக இவர் அரசியலுக்கு வந்த பின்னர் அவர்மீது வைத்திருந்த மதிப்புப் போய்விட்டது.

வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரீஸ் அவர்கள் ‘எமது நாடுகளில் இனம், மதம் சார்ந்து செயற்படும் அரசியல் கட்சிகள் வெளிவிவகாரக் கொள்கைகளை உருவாக்குவதற்கு சிக்கலாக அமைந்துள்ளன எனக் குறிப்பிட்டிருக்கிறார். தத்தம் இனம் சார்ந்து, மதம் சார்ந்து செயற்படுவதாக இக்கட்சிகள் கூறுவது நல்லசிந்தனை என தான் நினைக்கவில்லை என்றும் தன்னுடைய கருத்தில் இவை நாட்டுக்குப் பாதகமாகவே அமைந்துள்ளன எனவும் கூறியிருக்கிறார். தனது சொந்தநாட்டில், முஸ்லீம், தமிழ் உறப்பினர்கள் தேசிய அரசியற் கட்சிகளில் முக்கிய இடத்தை பெற்றிருக்கிறார்கள்’ என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால் இந்நாட்டில் பெரும்பான்மையான தமிழர்களும், முஸ்லீங்களும் தங்களுடைய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்து கட்சிகளையே தெரிவு செய்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு இந்தத் தேசியக்கட்சிகளில் எந்த நம்பிக்கையும் கிடையாது. உங்களது கட்சிகளில் ஒரிரு தனிநபர்களை வைத்துக் கொண்டு தமிழர்களும், முஸ்லீங்களும் உங்களுடைய பக்கம் இருப்பதாக் கூறமுடியாது. இது ஒரு நேர்மையற்ற கூற்று. மதிப்புக்குரிய ஒரு கல்வியாளராக பேராசிரியர் பீரிஸ் அவர்கள் இவ்வாறான கருத்துகளை வெளியிடுவது அவரது நேர்மையற்ற தன்மையையே வெளிப்படுத்துகிறது. ஒரு கல்வியலாளாராக முன்னர் பெருமதிப்புடன் இருந்த ஒருவர் இப்படி கூறுவது ஒரு துர்ப்பாக்கியமான நிலமை .

அதுமட்டுமல்ல, இப்படி கூறுவதன் மூலம் அவர் வேண்டுமென்றே சில விடயங்களை மறைக்க முற்படுகின்றார். அவர் இப்போது இருக்கின்ற கட்சியும் ( பொதுஜன பெரமுன ), அவர் முன்னர் அங்கம் வகித்த கட்சியும் (சுதந்திரக் கட்சி) இலங்கை தனித்து சிங்களவருக்கு உரியது என்று கூறியதன் மூலம் இந்நாடு இனத்துவ அடிப்படையில் பிரிவுகள் வளர்வதற்கு காரணமாக அமைந்தது. சிங்கள மக்களது வாக்குகளால் மட்டுமே தான் தெரிவுசெய்யப்பட்டதாக ஜனாதிபதி கூறுகிறார்.

இவ்வாறு பிரிவினைக் கருத்துகள் ஜனாதிபதியிடமிருந்தும், வெளிவிவகார அமைச்சரிடமிருந்தும் வெளிவரும்போது, அனைத்துலக அரங்குகளுக்குச் சென்று வேறுவிதமாகக் கூறுவது, அவர்களைத் தவறாக வழிநடத்துவது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியது. இந்தச் சபையின் கவனத்திற்கு இவைகொண்டுவரப்படவேண்டும்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments