தேசிய பாதுகாப்பு என்பது சிங்கள இனத்தின் பாதுகாப்பு மட்டுமா?

You are currently viewing தேசிய பாதுகாப்பு என்பது சிங்கள இனத்தின் பாதுகாப்பு மட்டுமா?

தேசிய பாதுகாப்பு என நீங்கள் கருதுவது சிங்கள இனத்தின் பாதுகாப்பை மட்டுமா என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பயங்கரவாத திருத்தச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு என நீங்கள் கருதுவது, சிங்கள இனத்தின் பாதுகாப்பை மட்டுமா?. இங்கு நாடு என நீங்கள் கருதுவது, ஒரு இனத்தை மட்டும் தான் குறிக்கிறதா? அல்லது இந்த நாட்டின் அனைத்து குடிமக்களையும் குறிக்கின்றதா? அனைத்து இன குடிமக்களையும் உள்ளீர்த்து அவர்களுக்குமான பாதுகாப்பு என கருதினால், அது ஒரு போதும் பெரும்பான்மைவாத கருத்தியலில் இருந்து உருவாக முடியாது. உதாரணத்துக்கு இந்த அவையில் பெரும்பான்மையானவர்கள் ஒன்றை கேட்கிறார்கள் என்பதற்காக அது முழு நாட்டுக்கும் உரித்தானது என கருதவே முடியாது.

துரதிர்ஷடவசமாக இங்கு இருக்கின்ற எதிர்க்கட்சியினரும் அதே எண்ணப்பாங்கிலேயே கருத்துரைத்திருக்கிறார்கள். இங்கு இந்த நாடு என கூறும் போது, இங்கு பல்லின அடையாளங்களை வெளிப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஏற்பதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

எம்மை பொறுத்தவரை இந்த நாடு ஆகக்குறைந்தது இரு தேசங்களை கொண்ட பல்தேச நாடாகும். எனவே, ஒரு நாட்டின் கருத்து என வரும்போது, ஒவ்வொரு இனத்தினரினதும் எண்ணங்களும் எதிர்ப்பர்ப்புகளும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

இந்த நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்தது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அந்த போராட்டம் ஏன் நடந்தது என பாருங்கள். இந்த அரசு, தொடர்ச்சியாக இரு இனக்குழுமத்தை மட்டும் கருத்தில் கொண்டு மற்றைய சமூகத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து ஒதுக்கி, ஒடுக்கியதாலேயே இங்கு போராட்டம் உருவானது.

இந்த நாட்டை நாம் எப்படி உருவாக்கி பார்க்க விரும்புகிறோம் என்பதை வடக்கு கிழக்கின் மக்கள், ஜனநாயக ஆணையாக தொடர்ச்சியாகவும் மிக தெளிவாகவும் வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். அவை ஆயுதத்துக்கோ, பிரிவினைக்கோ ஆன கோரிக்கைகளாக இருக்கவில்லை. மாறாக, பிரிவினைக்கும் ஆயுதத்துக்கும் எதிரான ஆணைகளாகவே முன்பு இருந்திருந்தது.

இந்த அவைக்கு வந்திருந்த தமிழ் பிரதிநிதிகள், வன்முறையையும், பிரிவினையையும் நிராகரித்தே குரல் கொடுத்திருந்தார்கள். அவர்கள் கேட்டதெல்லாம், ‘எமது விருப்புகளையும் செவிமடுங்கள்.

எம்மையும் இந்த நாட்டின் சம பிரஜைகளாக மதித்து, எம்மையும் உள்வாங்குங்கள்’ என்பதே ஆகும். ஆனால் அங்கு தான் நீங்கள் தவறிழைத்தீர்கள். அன்று மட்டும் அல்ல, இன்று வரைக்கும் அதே தவறையே தொடர்ந்தும் இழைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

இந்த நாடு பல தேசங்கள் உடைய நாடென்றும் இங்கு எமக்கு சமஷ்டி முறையான ஆட்சியே தேவை எனவும் மிக தெளிவானதும் மிக உறுதியானதுமான ஜனநாயக ஆணையை மீளவும் மீளவும் எமது மக்கள் அளித்துவருகின்றனர்.

உண்மையில் இந்த அரசாங்கள் மக்களிடம் பெற்ற ஆணையை விட எமது மக்கள் அளித்த ஆணை ஜன்நாயக ரீதியில் வலுவானது. அதை மீளவும் மீளவும் நீங்கள் கருத்திலெடுக்காது நிராகரிக்கின்ற போது, எமது பிரதிநிதிகள் இங்கு வந்து அந்த ஆணையை பற்றி பேசிவது முட்டுச்சுவரில் தலையை மோதுவதாகவே இருக்கின்ற போது எம்மை ஒதுக்கி நடப்பதையே தொடர்ந்தும், உங்கள் செல்நெறியாக கொண்டிருக்கின்ற போது எமது மக்கள் வேறு என்ன செய்ய முடியும்?

எமது தாய் நிலத்தில் இருக்கும் மக்கள் தொடர்ச்சியாக உரிமை மறுக்கப்ப்டுகின்ற போது, அவர்களது தாய் நிலம் அவர்களிடம் இருந்து பறிக்கப்படுகின்ற போது, அவர்களது சமய வழிபாட்டிடங்கள் அபகரிக்கப்படுகின்ற போது, காலம் காலமாக உழுது பயிரிட்ட நிலத்தில் இருந்து போரினால் வெளியேறி இப்போது மீள வரும்போது, அவை காட்டு நிலமெனவும் அதில் பயிரிடமுடியாதெனவும் மறுதலித்து, அதே நேரம் வேறு பிரதேசத்தில் இருந்து வருகின்ற ஏனைய இனத்தவருக்கு நிலத்தில் வளர்ந்திருக்கும் மரங்களை வெட்டி உழுது பயிரிட அனுமதிக்கும் போது அந்த மக்கள் வேறு என்ன தான் செய்ய முடியும்?, ஆனால் இது தான் இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments