புதிய கூட்டணியின் சின்னத்தை இன்று அறிவிப்போம்!

You are currently viewing புதிய கூட்டணியின் சின்னத்தை இன்று அறிவிப்போம்!

தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து தேர்தல் கேட்பது தான் பிரியோசனமாக இருக்கும் என நாங்கள் நினைத்தோம். அந்த காரணத்தினால் தான் இந்த கூட்டத்தை கூடியிருக்கின்றோம் என தமிழ் கட்சிகள் தெரிவித்தன.

நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

இந்த கூட்டத்தில் வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களான பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை தேர்தல்களில் சேர்ந்து போட்டியிடுவதாக தீர்மானித்திருந்தோம்.

இது தொடர்பான முழுமையான விடயங்கள் ஆராய்ந்த பின்னர் சனி காலை (14) 10 மணியளவில் எமது புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். அதன்பின்னர் தான் தெளிவாக எமது விடயங்களை நாங்கள் எடுத்துரைப்போம்.

தமிழ் தேசிய கூட்டணியின் மான் சின்னத்தில் நாங்கள் அனைவரும் சேர்ந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என விக்னேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் தீவிரமாக வலியுறுத்தினார்கள்.

நாங்கள் அவருக்கு தெளிவாக கூறினோம் தமிழரசு கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதால் தான் பல காலமாக அவர்களுக்கும் உறுப்பு கட்சிகளுக்கும் இடையே பிரச்சினை இருந்துகொண்டு இருக்கின்றது. இப்போது உங்களது கட்சியில் தேர்தலில் போட்டியிட முடியாது, ஒரு கூட்டுக் கட்சியாகத் தான் போட்டியிட முடியும் என்று நாங்கள் கூறினோம்.

அதற்கு அவர் தன்னுடைய கட்சியில் கேட்க வேண்டும் அல்லது தான் வெளியேறுவேன் என அவர் கூறினார். அது மட்டுமல்ல வேறு கூட்டு கட்சியில் போட்டியிடுவதாக இருந்தாலும் அதற்கு தான் செயலாளராக இருந்தால் போட்டியிடலாம் என அவர் கூறியிருந்தார்.

அது சாத்தியம் அற்ற விடயம். தேர்தல் காலம் நெருங்கி விட்டது, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது என அவருக்கு விளக்கமளித்தும் அவர் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டு சென்றுள்ளார்.

அவர் இரவு சிந்தித்து விட்டு பதில் சொல்வார் என செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் அவ்வாறு சிந்தித்து விட்டு சாதகமான பதில் தந்தால் அதில் பிரச்சினை இருக்காது.

சனி காலை புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் நாங்கள் என்ன சின்னத்தில் போட்டியிடுவோம் என ஊடகங்களுக்கு நாளை தெரியப்படுத்துவோம் என்றனர்.

இதேவேளை விக்கினேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.

புதிய கூட்டணியின் சின்னத்தை இன்று அறிவிப்போம்! 1

தமிழ்க் கட்சிகள் சில என்னை பொம்மை போல பாவித்து தாங்கள் நினைத்ததை செய்வதற்கு முயற்சித்தார்கள் போல தெரிந்தது. அது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது அதனால் கட்சிகளின் கூட்டத்தில் இருந்து நான் வெளியேறினேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுடன் அங்கு வந்திருந்து அதனை மேற்கொள்ள திட்டமிட்டனர்.சில விடயங்களில் இணக்கம் ஏற்பட்ட போதும் பல விடயங்கள் முரண்பாட்டை தோற்றுவித்தது.

ஐந்து கட்சிகளின் கூட்டணியாக நாம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்த போது இன்றைய கூட்டத்தில் எமக்குத் தெரியாமல் திடீரென புதிதாக ஜனநாயக போராளிகள் கட்சியை அழைத்து வந்திருந்தனர்.

ஐனநாயகப் போராளிகள் கட்சி பல்வேறு குழுக்களுடன் தொடர்புடையதாக நான் அறிந்தேன். புலிகளோடு இருக்கும் போது அவர்கள் எப்படி இருந்தார்கள் என்றும் தற்போது அவர்கள் எப்படி இருக்கின்றார்கள் என்பதனையும் நாம் அறிய வேண்டும். அவர்களை ஆறாவது கட்சியாக கூட்டணிக்குள் இணைக்கும் முடிவை ரெலோ, புளொட் தன்னிச்சையாக எடுத்தார்கள். ஆனால் நாம் அதனை ஏற்றுக் கொண்டோம்.

கூட்டணியின் பெயராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என கட்சியின் பெயரை தெரிவித்து அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயல்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது. மேலும் கூட்டணியின் தலைமைப் பதவியினை விட்டுக் கொடுத்திருந்தோம். எனினும் சின்னம் அல்லது கட்சி செயலாளர் பதவியையாவது எமது கட்சிக்கு தருமாறு கோரினோம். அவர்கள் அதற்கு மறுத்ததால் நாம் கூட்டத்தில் இருந்து வெளியேறினோம்.

எதிர்வரும் தேர்தலில் மான் சின்னத்தில் தமிழ் மக்கள் கூட்டணி போட்டியிடும் – என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments