You are currently viewing

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு, தீர்வு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையில், தேசிய பொங்கல் விழா கொண்டாட்டத்தை, யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்து, தமிழர்களுடன் இணைந்திருக்கின்றோம் என்பதனை, சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் முகமாக நடத்தப்படும் பொங்கல் விழாவுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகை தரும் பொழுது, எதிர்ப்பு தெரிவித்து, அமைதிவழி போராட்டம் ஒன்றை நடத்த, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இது தொடர்பில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில், நேற்று மாலை, ஊடக சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்று, கருத்து வெளியிட்டனர்.

எங்களுடைய தமிழ் மக்கள் வடகிழக்கு எங்கிலும் பல்வேறு பிரச்சனைகளுக்குள் சிக்குண்டு தொடர்ச்சியாக எதுவிதஅரசியல் தீர்வுகளும் இன்றி தங்களுடைய நாள் ஒவ்வொன்றையும் கழித்து வருகின்ற நிலையில் காணாமலாக்கப்பட்டோர் , அரசியல்கைதிகள், காணி விடுவிப்பு ,இராணுவ ஆக்கிரமிப்பு,பௌத்தமயமாக்கல் என அரசின் திட்டமிடப்பட்ட இனபிரச்சனைகளுக்குள் இருந்து மக்கள் இதுவரை வெளிவராத நிலையிலும் தேசிய பொங்கல் விழா ஒன்றினை இந்த ஜனாதிபதி எவ்வாறான மனநிலையில் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்த முடியும்?

ஜனாதிபதி பொங்கல் விழாவை மேற்கொள்வதில் எங்களுக்கு எதுவித ஆட்சேபனையும் கிடையாது தமிழர்களுக்குரிய பிரச்சினைகளுக்குரிய தீர்வு ஒன்றினை வழங்கிய பின்னர் அவர் குறித்த பொங்கல் நிகழ்வினை முன்னெடுப்பதற்கு தமிழ் மக்களாக நாங்களும் இணைந்து கொள்வோம்.

ஆகவே முதலில் தமிழ் மக்களினுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் இது தீர்க்கப்படாது மேற்கொள்ளப்படுகின்ற குறித்த பொங்கல் நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று எங்களுடைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் சிவில் அமைப்புகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைவாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 3 மணியளவில் குறித்த பொங்கல் நிகழ்வு நல்லூர்பகுதயில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் இடம் பெற இருக்கின்ற தருணத்தில் 1 மணியளவில் யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி தொடர்ச்சியாக பொங்கல் நிகழ்வு இடம்பெறும் இடத்திற்கு சென்று நிறைவவடையும்.

அதே நிலையில் இந்த பொங்கல் நிகழ்வில் வடகிழக்கு மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கட்சித் தலைமைகள் உட்பட்டவர்கள் அரசியல் பேதமின்றி குறித்த பொங்கல் நிகழ்வை முற்றாக நிராகரிப்பதோடு எங்களுடைய இந்த சாத்வீக போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என அழைப்பு விடுப்பதோடு அனைத்து சிவில் அமைப்புக்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments