முன்நிபந்தனை இன்றி முதுகில் குத்தும் துரோகம்!

You are currently viewing முன்நிபந்தனை இன்றி முதுகில் குத்தும் துரோகம்!

நாமே நமக்காய் எழுந்து நடப்போம்…

முன்நிபந்தனை இன்றி
முதுகில் குத்தும் துரோகம்
மீண்டும் அரங்கேறுகிறது!

இனமக்களின் வாக்குகளால்
வெள்ளை வேட்டியை மடிச்சுக்கட்டியோர்
கள்ளத்தனமாக களமிறங்கும்
காட்சிகளின் விரிப்பு காற்றோடு
மூசி வருகிறது!

நேற்று வரை நெறிபுரளாக் கொள்கைக்காக
மறப்போர் புரிந்த புனிதர்களின்
இறவாக் கனவினை காயப்படுத்திட
எதிராளியின் பாதம்கழுவி
பூசை நடத்திட
பாதகர் கூட்டமொன்று
பாதைமாறிய பயணத்தில்
தாயை விற்றுப்பிழைக்க
மாயை அரசியலுக்குள் மயங்கி
மடிவீங்கும் அரசியல் இலக்கிற்கு
மண்மடி உறங்கும் மறவரின் உறுதியினை உருக்குலைத்தவாறு
ஊருக்குள் வருகிறது!

உவர்கள் எமக்கானவர் அல்ல
எதிரியின் பாதணிக்கானவர்!

பொங்கலுக்கு வருகுது
தீபாவளிக்கு வருகுதென்று
ஏங்க வைத்து காதில் பூச்சுத்தி
பைகள் வீங்க பொய் பொய்யாய்
கொட்டி தீர்த்த கோதாரி விழுந்த
கோடாரிக்காம்புகளின்
பிடரி பாறி விழுந்த சிந்தனையில்
உரிமைப்போரின் உச்சந்தலை
சீழ் பிடித்து மணக்கப்போகிறது!

தேர்தல் வருங்காலங்களில்
வாரி வாரி இறைத்த
உரிமைக் கோசங்களெல்லாம்
அடுத்தவன் அரசியலின்
அங்கீகாரத்திற்காக
மக்கிப்போன மட்டைகளாக
காலில் மிதிபட்டு உடைகிறது!

ஒற்றையாட்சியுக்குள்
பேசுவது ஏற்புடையதல்லவென
தமது முதுகு முறிவுவை வெளியில்
மறைக்க
தமக்குத்தானே வெள்ளையடித்தவாறு
கறுத்த ஆடுகளெல்லாம்
ஊதிப்பெருத்த ஊனத்தில்
கத்துகிறது!

கொத்துகொத்தாக
சொந்தங்களின்
உயிர்களை கொன்று குவித்த
கூட்டங்களை இன்னும்
நம்பியவாறு
குறைப்பிரசவமாய்
விடுதலைக்குழந்தையை
பெற்றெடுக்க
விற்றுபிழைக்கும் கூட்டம்
ஒற்றுமையெனும் பெயரில்
ஒற்றர்களாய் ஓர் அணியாம்!

மக்களே விளித்திடுவீர்!
மாண்ட வீரரின் கனவை காத்திடுவீர்!
வீழ்ந்தது அவமானமல்ல
இன்னும் வீழ்ந்து கிடப்பதுதான்
அவமானம்!
ஆண்ட பரம்பரை துவழ்ந்து போகமுடியாது!
தூரமானாலும் நாமே நமக்காய்
எழுந்து நிற்போம்!

✍️தூயவன்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments