பயங்கரவாதத்துடன் தொடர்புடைய விவகாரங்களைக் கையாள்வதற்குரிய சரத்துக்களை நாட்டின் பொதுச்சட்டத்தில் உள்ளடக்கமுடியும் எனவும், அதற்கென பயங்கரவாதத்தடைச்சட்டம் போன்ற விசேட சட்டம் அவசியமா எனவும் தாம் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இருப்பினும் தாம் பாதுகாப்புத்துறைசார் கட்டமைப்பு அல்ல என்பதால், அடிப்படை மனித உரிமை மீறல்களுக்கு அப்பாற்பட்டு தம்மால் இவ்விடயத்தில் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கமுடியாது எனத் தெரிவித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தவிசாளர் மற்றும் ஆணையாளர்கள் கடந்த ஆண்டு தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது. இச்சந்திப்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் நீதியரசர் (ஓய்வுபெற்ற) எல்.ரி.பி.தெஹிதெனிய, ஆணையாளர்களான பேராசிரியர் ரி.தனராஜ், பேராசிரியர் பாத்திமா பர்ஸானா ஹனீஃபா, கலாநிதி ஜெஹான் டினுக் குணதிலக, நிமல்.ஜி.புஞ்சிஹேவா மற்றும் ஆணைக்குழுவின் செயலாளர் ரஞ்சித் உயன்கொட ஆகியோர் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டனர்.
அதற்கமைய நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணை, கடமைகள் மற்றும் அதிகாரங்கள், ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிகள் என்பன தொடர்பில் தவிசாளர் தெஹிதெனிய தெளிவுபடுத்தினார்.
குறிப்பாக நாடளாவிய ரீதியில் மனித உரிமைகள் மீறல் பற்றி கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல், பொலிஸ் நிலையம் உள்ளடங்கலாக தடுப்புக்காவல் நிலையங்களுக்குச்சென்று கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடல், விசேட தேவையுடையோர் மற்றும் பால்புதுமையின சமூகம் உள்ளடங்கலாக நாட்டின் அனைத்துத்தரப்பினரதும் உரிமைகளை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி செயற்படல்,
நாடளாவிய ரீதியில் மனித உரிமைகள் தொடர்பில் சீரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இலக்காகக்கொண்டு பணியாற்றல் போன்றவற்றில் தாம் விசேட கவனம் செலுத்தியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி தாம் கடந்த ஆண்டு ஆணைக்குழுவில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டபோது உரியவாறான விசாரணைகள் மூலம் தீர்வு காணப்படாத பெரும் எண்ணிக்கையான முறைப்பாடுகள் நிலுவையில் இருந்ததாகவும், கொவிட் – 19 பெருந்தொற்றுப்பரவல், ஊழியர் பற்றாக்குறை என்பன அதற்குக் காரணமாக அமைந்திருந்ததாகவும் குறிப்பிட்ட அவர், அவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அவரைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தாம் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ளும்போது சுமார் 12,000 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் முடிவுறுத்தப்படாமல் நிலுவையில் இருந்ததாகவும், அவற்றில் சுமார் 9000 முறைப்பாடுகள் தம்மால் முடிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதுமாத்திரமன்றி கடந்தகாலங்களில் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்கள் மிகமுக்கிய மனித உரிமை மீறல் பிரச்சினையாகக் காணப்பட்டதாகவும், குறிப்பாக 2023 இல் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்பு தொடர்பில் 24 சம்பவங்கள் பதிவாகியிருந்ததாகவும் சுட்டிக்காட்டிய அவர், இவற்றை முழுமையாக முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கில் பொலிஸாருக்குரிய வழிகாட்டல்களைத் தயாரித்து வெளியிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அதேபோன்று அண்மையகாலங்களில் போதைப்பொருளை இல்லாதொழிக்கும் நோக்கில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘யுக்திய’ செயற்திட்டத்தினால் பொதுமக்களின் மனித உரிமைகள் மீறப்படுவது பற்றி 44 முறைப்பாடுகள் தமக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.
அதனையடுத்து சிறுவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளல், பெண்களை இரவு நேரத்தில் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லல், அவ்வாறு அழைத்துச்செல்லும்போது பெண் பொலிஸ் அதிகாரிகள் உடனில்லாதிருத்தல் போன்ற விடயங்கள் பற்றி ஆராய்ந்து, உரிய வழிகாட்டல்களை பொலிஸாருக்கு வழங்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஆணைக்குழுவில் கல்வி மற்றும் பயிற்சி வழங்கல் பிரிவுக்குப் பொறுப்பாக செயற்படும் ஆணையாளர் தனராஜ் கருத்து வெளியிடுகையில், பாடசாலை மாணவர்களுக்கான பாடத்திட்டத்திலும், ஆசிரியர் கற்பித்தல் செயற்திட்டத்திலும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை உள்வாங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், விசேட தேவையுடையோருக்கு அவசியமான பயற்சிகள் வழங்கப்பட்டுவருவதாகவும் கூறினார்.
அதேவேளை பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதுடன் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் நகர்வுகள் பற்றி ஆணையாளர் பர்ஸானா ஹனீஃபாவும், சர்வதேச சட்டங்கள் மற்றும் பிரகடனங்களுக்கு அமைவாக இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை உறுதிப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆணையாளர் ஜெஹான் குணதிலகவும் தெளிவுபடுத்தினர்.
இதன்போது நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம், உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம், பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதெல்லையைக் குறைக்கும் வகையில் தண்டனைச்சட்டக்கோவையில் திருத்தம் மேற்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட திருத்தச்சட்ட மசோதா என்பன தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கரிசனைகள் வெளிப்படுத்தப்பட்டு, பரிந்துரைகளும் சமர்ப்பிக்கப்பட்டதாக ஜெஹான் குணதிலக சுட்டிக்காட்டினார்.
அதேவேளை தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுவரும் நிலையில், இவ்வாறானதொரு பிரத்யேக சட்டம் நாட்டுக்கு அவசியமா எனக் கேள்வி எழுப்பியபோது, அதற்குப் பதிலளித்த ஜெஹான் குணதிலக கூறியதாவது:
‘நாம் நாட்டின் பாதுகாப்புத்துறைசார் கட்டமைப்பு அல்ல. எனவே இவ்வாறானதொரு சட்டம் அவசியமா? இல்லையா? என்பது பற்றி எம்மால் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கமுடியாது. மாறாக இச்சட்டப்பிரயோகத்தினால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படும் பட்சத்தில், அதுசார்ந்த ஆலோசனைகளையே எம்மால் வழங்கமுடியும். இருப்பினும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய விவகாரங்களைக் கையாள்வதற்குரிய சரத்துக்களை நாட்டின் பொதுச்சட்டத்தில் உள்ளடக்கமுடியும் எனவும், அதற்கென விசேட சட்டம் அவசியமா எனவும் நாம் ஏற்கனவே வினவியிருக்கின்றோம் என்று தெரிவித்தார்.