நியூசிலாந்துக்கு எதிரான நேற்று நடந்த முதலாவது ஒருநாள் துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணியின் அணித்தலைவர் விராட்கோலி 51 ஓட்டங்கள் எடுத்தார்.
அணித்தலைவராக 87 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் விராட்கோலி 21 சதம், 23 அரைசதம் உள்பட 5,123 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இதன் மூலம் அவர் ஒருநாள் போட்டியில் இந்திய அணித்தலைவராக அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த 148 ஒருநாள் போட்டியில் 5,082 ஓட்டங்கள் எடுத்த முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலியை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை தனதாக்கி இருக்கிறார்.
இந்த வகையில் இந்திய முன்னாள் அணித்தலைவர்கள் டோனி (200 ஒருநாள் போட்டியில் 6,641 ஓட்டங்கள்) முதலிடத்திலும், முகமது அசாருதீன் (174 ஒருநாள் போட்டியில் 5,239 ஓட்டங்கள்) 2-வது இடத்திலும் உள்ளனர்.