அணு மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் யுரேனியம் எனும் கதிரியக்க பொருட்கள் அடங்கிய, சீன கப்பலொன்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் பிரவேசித்தமையால் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெதர்லாந்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ரொட்டர்டாம் துறைமுகத்திலிருந்து இருந்து சீனா நோக்கி பயணிக்கும் போதே இந்த கப்பல் இயந்திரக்கோளாறு காரணமாக , அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசித்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதியை, அக்கப்பலின் இலங்கை பிரதிநிதி ஊடாக, இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையிடமிருந்து அக்கப்பல் பெற்றிருந்ததாக அறிய முடிகின்றது.
எவ்வாறாயினும் கதிரியக்க பொருட்களுடன் கப்பலொன்று, இலங்கை அணு சக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் அனுமதியைப் பெற்றிருக்கவில்லை.
குறித்த சீன கப்பலானது, அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் நுழைந்த பின்னர், அக்கப்பலில் இருந்த கொள்கலன்களுக்குள் யுரேனியம் எனும் கதிரியக்க பதார்த்தம் இருப்பது தொடர்பில், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கட்டுப்பாட்டாளருக்கு தெரியவந்துள்ளது.
அந்த தகவலை அவர், இலங்கை அணு சக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை மற்றும் இலங்கை அனுசக்தி கட்டுப்பாட்டு சபை ஆகியவற்றுக்கு அறிவித்ததை அடுத்து, உடனடியாக குறித்த கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து வெளியேற அறிவித்தல் விடுத்ததாக இலங்கை அணு சக்தி ஒழுங்குபடுத்தல் பேர்வையின் பணிப்பாளர் நாயகம் எச்.எல். அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.