தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. அந்த வகையில் 84 நாட்களுக்கு பிறகு நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,65,124 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 17,504 ஆண்கள், 13,575 பெண்கள் என மொத்தம் 31 ஆயிரத்து 079 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 1,081 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 4,787 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக கோவையில் 3,937 பேரும், சென்னையில் 2,762 பேரும், திருப்பூரில் 1,823 பேரும், செங்கல்பட்டில் 1,379 பேரும், ஈரோட்டில் 1,731 பேரும், மதுரையில் 1,140 பேரும், திருச்சியில் 1,287 பேரும், கன்னியாகுமரியில் 1,007 பேரும் குறைந்தபட்சமாக அரியலூரில் 229 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
486 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இதுவரை 11 லட்சத்து 87 ஆயிரத்து 314 ஆண்களும், 8 லட்சத்து 22 ஆயிரத்து 348 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 20 லட்சத்து 9 ஆயிரத்து 700 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 72 ஆயிரத்து 291 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2 லட்சத்து 84 அயிரத்து 874 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 262 பேரும், தனியார் மருத்துவமனையில் 224 பேரும் என 486 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.
ஒரு வயது குழந்தை பலி
அந்தவகையில் அதிகபட்சமாக சென்னையில் 107 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கோவையில் 33 பேரும், திருவள்ளூரில் 32 பேரும், செங்கல்பட்டு, கன்னியாகுமரியில் தலா 29 பேரும், வேலூரில் 27 பேரும், சேலத்தில் 23 பேரும், ஈரோட்டில் 21 பேரும், ராணிப்பேட்டை, திருச்சியில் தலா 18 பேரும், திருப்பூர், நாமக்கல், மதுரை, காஞ்சீபுரத்தில் தலா 12 பேரும் உள்பட நேற்று மட்டும் 36 மாவட்டங்களில் 486 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
அதில், சென்னையை சேர்ந்த ஒரு வயது குழந்தை கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளது. கடந்த 23-ந்தேதி சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் உடல்நலக்குறைவால் ஒரு வயதே ஆன ஆண் குழந்தை அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை கடந்த 25-ந்தேதி உயிரிழந்தது. இந்தநிலையில் பிரேத பரிசோதனை முடிவில் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் இணை நோய் அல்லாதவர்கள் 117 பேர் அடங்குவர். அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 22 ஆயிரத்து 775 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
31,255 பேர் ‘குணமடைந்துள்ளனர்
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 31,255 பேர் நேற்று‘குணமடைந்துள்ளனர்’ இதுவரையில்16 லட்சத்து 74 ஆயிரத்து 539 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 386 பேர் உள்ளனர்.