போர் பதற்றம் அதிகரித்து இருக்கும் சூழ்நிலையில், உக்ரைனின் எல்லையில் ரஷ்யாவின் அணுஆயுத போர் விமானங்கள் பறந்து இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பயங்கரமான போர் கப்பலான மாஸ்க்வாவை கருங்கடல் பகுதியில் ரஷ்யா இழந்த பிறகு, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
அந்தவகையில் உக்ரைன் தலைநகரான கீவ் மற்றும் மேற்கு பகுதியான லிவிவ் ஆகிய நகரங்களில் சிலநாள்களாக தாக்குதல் நடத்தாமல் இருந்த ரஷ்ய வான் படைகள் மீண்டும் தனது தாக்குதலை தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், அதிகரித்து வரும் போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், உக்ரைனின் கிழக்கு எல்லை பகுதிகளில் ரஷ்யாவின் அணுஆயுத போர்விமானம் TU-160 nuclear bombers பறந்து இருப்பது உலக நாடுகளை அச்சமடைய வைத்துள்ளது.
TU-160 அணுஆயுத போர் விமானம் பறந்தது தொடர்பான வீடியோ காட்சிகள் உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் எல்லைப் பகுதியான கலுகா பகுதியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதில் நான்கு போர் விமானங்களுக்கு மத்தியில் அணுஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய TU-160 அணுஆயுத போர் விமானம் பறந்துசென்று இருப்பது பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அணுஆயுத போர் விமானங்கள் பறந்ததற்கான நோக்கங்கள் குறித்து இதுவரை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ரஷ்ய அணுஆயுதங்களை உக்ரைன் மீது பயன்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக அச்சம் தெரிவித்து இருந்த நிலையில் ரஷ்யாவின் அணு ஆயுத போர் விமானம் வான்வீதியில் பறந்து இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.