தேசிய பிரச்சினைக்கான அதிகாரப்பகிர்வு குறித்து இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பின் போது கலந்துரையாடவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். இந்தியாவுக்கு பயணம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இந்த சந்திப்புக்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தே இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிட்டார். சந்திப்புக்கள் ஆக்கபூர்வமாக அமைந்தன என்றும் அவர் கூறினார்.
எனினும் இந்த பயணத்தின் போது, அதிகாரப் பகிர்வு குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும் தனது சந்திப்புக்கள் மற்றும் கலந்துரையாடல்கள் அனைத்தும் வெளிவிவகார அமைச்சுக்குரிய விடயதானங்களுக்குட்பட்டதாகவே காணப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.