நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த பேராசிரியர் கல்யாண சுந்தரம் கடந்த செப்டம்பர் மாதத்தில் கட்சியிலிருந்து விலகினார். அதேபோல் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியும் கட்சியிலிருந்து விலகினார். இதனால் கட்சிக்குள் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டது. அதேவேளையில் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இவர்கள் இருவரும் கட்சிக்கு எதிராக செயல்பட்டு வந்ததாகவும், என் சாவை எதிர்நோக்கி காத்திருந்தவர் தான் கல்யாண சுந்தரம் எனவும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
மேலும் கட்சியிலிருந்து இருவர் வெளியேறினால் பிளவு ஏற்பட்டு விடாது என்று தெரிவித்திருந்த சீமான் தன்னை இரண்டாக வெட்டினால் மட்டுமே நாம் தமிழர் கட்சியில் பிளவு ஏற்படும் எனவும் கூறியிருந்தார். சீமான் தன் மீது வைத்த விமர்சனங்களுக்கு தொடர்ச்சியாக பதிலளித்து வந்த கல்யாண சுந்தரம், திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணையவுள்ளேன் என தமிழக தொலைக்காட்சி ஒன்றிற்கு பேராசிரியர் கல்யாண சுந்தரம் தகவல் தெரிவித்துள்ளார். அவருடன் அவரது ஆதரவாளர்கள் சிலரும் அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.