அன்னைபூபதி அம்மாவின் உண்ணாநிலைப்போராட்டத்தின் ஆரம்பநாள்!

You are currently viewing அன்னைபூபதி அம்மாவின் உண்ணாநிலைப்போராட்டத்தின் ஆரம்பநாள்!

தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 அன்றிலிருந்து  19.04.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதி அம்மா.

எம் தேசத்தின் உரிமைக்காக குரல் கொடுப்போரை பாரதம் அன்றும் இன்றும் ஏளனமாகவே பார்த்தது அது எத்தனையோ உயிர்களையும் பறித்தது. உலகிற்கு அகிம்சையை போதித்த நாடு என்று கூறிக்கொண்டு அடாவடித்தனமான செயல்களில் ஈடுபட்ட இந்திய அரசுக்கு எதிராகவும் அதன் அமைதி காக்கும் படைக்கு எதிராக உண்ணா நோன்பிருந்து உயிர் தியாகம் செய்தவர் அன்னைபூபதி.  

இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்தும் போர் நிறுத்தப்பட வேண்டும். 

விடுதலைப்புலிகளுடன் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும். 

எனும் கோரிக்கைகளை முன் வைத்து 1988 ம் ஆண்டு மாசி மாதம் 16 ஆம் திகதி அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில் அன்னம்மாவின் உண்ணாநோன்புப் போராட்டம் தொடங்கியது. ஆனால் படையினர் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றதில் அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில் தான் பூபதியம்மாள் தன் போராட்டத்தை 1988 ம் ஆண்டு மார்ச்  மாதம் 19 ஆம் திகதி தொடங்கினார். முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார்.பத்துப்பிள்ளைகளுக்கு, தாயார் இவர்.நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார்.இடையில் பல தடங்கல்கள் வந்தன. உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 தமிழீழ காற்றில் கலந்து வரலாறாகிச் சென்றார்.

அன்னைபூபதி அம்மாவின் உண்ணாநிலைப்போராட்டத்தின் ஆரம்பநாள்! 1

அந்த இலட்சியத் தாயின் நினைவாக  ஏப்ரல்  மாதம் 19ம் திகதியை தமிழீழ தேசியத்தலைவர் தேசிய நாட்டுப்பற்றாளார் தினமாக பிரகடனம் செய்தார். தாயக விடியலில் தாகம் கொண்டு பல சர்ந்தப்பங்களில் தங்கள் உயிரை அர்பணித்து அனைத்து நாட்டுப்பற்றாளர்களுக்கும், மாமனிதர்களுக்கும், வெளித் தெரியாது தேசவிடுதலைக்கு உழைத்த மக்களுக்கும் எமது வீரவணக்கங்கள்…!

பகிர்ந்துகொள்ள