அன்ரன் சின்னராசா பிலிப் அவர்களுக்கு
“நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு.
தமிழீழத் தாயகப்பற்றோடு தேசியப்பணிகளில் முன்னின்று உழைத்து வந்த அன்ரன் சின்னராசா பிலிப் அவர்கள், 26.02.2023 அன்று உடல்நலக்குறைவினால் சாவடைந்தார் என்ற செய்தி தமிழ்மக்களைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகாலத்தில், எமது அமைப்பின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டமையினால் சிறிலங்கா அரசினால் கைதுசெய்து சிறைவைக்கப்பட்டிருந்தபோது, 1983 ஆம் ஆண்டு மட்டக்களப்புச் சிறையிலிருந்து வெளியேறிய அரசியற்கைதிகளில் இவரும் ஒருவர், இதை அறிந்த தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள், இவரை இந்தியாவுக்குப் பாதுகாப்பாக அனுப்பியிருந்தார்.
கனடா ரொறென்ரோவில் வாழ்ந்த போதும், தான்நேசித்த தமிழீழ மக்கள் விடுதலைபெறவேண்டுமென்று எண்ணிய இவர், சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பை ஆவணப்படுத்தும் பணியில் அயராது உழைத்ததுடன், ஐ.நா. மனித உரிமைகள் அவையின் விசாரணைகளுக்குத் தேவையான சாட்சியங்களை உள்ளடக்கிய ஆவணத் தொகுப்பினை உருவாக்குவதில் மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்தவராவார்.
கனடா தமிழ்ச் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு விடுதலைசார்ந்த விடயங்களை முன்னெடுக்கும் வேளையிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்க் குமூகத்துக்குத் தன்னாலான உதவிகளை மேற்கொண்டதுடன், தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கான பன்முகச்சேவைகளை மேற்கொண்டு தமிழ்க் குமூகத்தில் நன்மதிப்பைப் பெற்றவராவார்.
இத்தகைய விடுதலைப்பற்றுறுதியுடன் இறுதிவரை செயற்பட்ட செயற்பாட்டாளரைத் தமிழ்மக்கள் இழந்து நிற்கின்றனர். இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன், அன்ரன் சின்னராசா பிலிப் அவர்களது தேசப்பற்றுக்காகவும் தமிழினத்திற்கு ஆற்றிய பணிக்காகவும் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத்தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
அன்ரன் சின்னராசா பிலிப் அவர்களின் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு.