யாருக்கு அதிக ஆசனம் யாருக்கு குறைந்த ஆசனம் என நாங்கள் ஆசனங்களுக்காக தேர்தல் அரசியலுக்குள் முடங்கிப்போய்விடுவதானது அன்ரன் பாலசிங்கம் ஐயா வாழ்க்கை அவருடைய தியாகம் அவர் எங்கக்குச் செய்த பங்களிப்பு, வழிகாட்டல் அனைத்தையும் வீணடிப்பதாகவே இருக்கும்
எனக் குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தற்போதய அரசியல் சூழல்களைப் புரிந்துகொண்டு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் பின்பற்றிய கொள்கைப்படி நடப்பதுதான் தமிழ்த் தேசம் அவருக்குச் செய்யக்கூடிய அஞ்சலி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 11 அவது ஆண்டு நினைவுநாள் அன்று (14.12.2017) வியாழக்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவுகூரப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் பசுந்தமிழன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ஐயாவின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார்.
அதன்போது குறிப்பிட்ட அவர்,
தமிழ்த் தேசியப் போராட்டம் தொடர்பாகவும் அதன் நியாயப்பாடுகள் தொடர்பாகவும் தத்துவங்கள் தொடர்பாகவும் பாலசிங்கம் ஐயாவின் பங்களிப்பு வேறு எவரும் கிட்ட நெருங்க முடியாத அளவிற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் அவருடைய பங்களிப்பு அந்தளவு தூரம் என்றால் தேசத்துக்கான அவரது பங்களிப்பு எந்தளவு தூரம் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.
பாலசிங்கம் ஐயாவின் இழப்பானது நிச்சயமாக எங்களுடைய தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுசெய்யப்பட முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
அவரோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றபொழுது அறிவுரீதியாக எங்களுக்கு சவாலான ஒரு காலகட்டத்தில் எங்களுக்கு வழிகாட்டல் செய்யக்கூடிய அளவிற்கு பாலபாலசிங்கம் ஐயா போன்று ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய இன்னொருவர் மாமனிதர் சிவராம் அவர்கள்.
இப்படிப்பட்ட நபர்களை எங்களுடைய சரித்திரத்தில் முக்கியமாக கட்டத்தில் நாங்கள் இழக்கவேண்டி வந்தது தான் வாக்குகைளைப் பெற்ற எங்கள் தரப்புக்கள் திசைமாறிப் போய் செயற்படக்கூடிய அளவிற்கு நிலமைகளை உருவாக்கியிருக்கின்றது.
உண்மையில் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவுகள் அடைந்திருந்தாலும் அரசியல் ரீதியாக எங்களுக்கு வழிகாட்டுவதற்கு பாலசிங்கம் போன்றவர்கள் இருந்திருந்தால் இன்று நிலமைகள் வேறாக இருந்திருக்கும்.
துரதிஸ்டவசமாக ஆயுதப் போராட்டம் சாவாலை ஏற்படுத்திய காலகட்டத்தில் அவருடைய அறிவையும் நாங்கள் இழக்கவேண்டியதாகிவிட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரையில் ஆரம்பத்திலிருந்து எங்களுடைய அரசியல் கலாச்சாரமானது மிகத் தெளிவாக ஒரு கொள்கை சார்ந்த கலாச்சாரமாகவே இருந்திருக்கின்றது. கொள்ளை நீதியாக நாங்கள் எந்த ஒரு இடத்திலும் விட்டுக்கொடுப்பதற்குத் தயாராக இல்லை.
இன்று கொள்ளை ரீதியாக பிழையாக சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் தேசத்தை விற்கும் நிலைக்குச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் அவர்களை இனங்கண்டு அவர்களுடைய உண்மையான முகங்களை தமிழ்த் தேசத்தவர்களுக்குக் காட்டி பாலசிங்கம் ஐயாவின் கருத்துக்களையும் சுட்டிக்காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தளவு தூரத்துக்கு விலைபோயிருக்கின்றது என்பதைக் காட்டி அவர்களை ஓரங்கட்டுகின்ற அதேநேரம் மறுபக்கத்தில் நாங்கள் சரியான, நேர்மையான கொள்கையில் உறுதியான நிலைப்பாட்டுடன் ஒரு தெளிவான அரசியலை உருவாக்குவோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிழை செய்கிறார்கள் எனக்கூறி அவர்களைத் தோற்கடிப்பதற்காக கொள்கைகளைக் கைவிட்டு எவருடனும் சேர்ந்து இயங்குவதில் எந்தவிதபிரியோசனமும் இல்லை.
அதனால் தான் எங்களுக்கு நெருக்கடியான நிலைகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களிலும் எமது முயற்சிகளைக் கைவிடாது நாங்கள் கொள்கைப்படி பயணிக்கின்றோம். தொடர்ந்தும் கொள்கைக்காகவே பயணிப்போம் என பாலசிங்கம் ஐயாவின் நின்றைய நினைவுநாளில் உறுதிஎடுத்துக்கொள்வோம். – என்றார்.