அமெரிக்காவின் அறிவிப்பு மனிதகுலத்திற்கு எதிரான மீறல்களுக்கு எச்சரிக்கை!

You are currently viewing அமெரிக்காவின் அறிவிப்பு மனிதகுலத்திற்கு எதிரான மீறல்களுக்கு  எச்சரிக்கை!

இலங்கைப் பாதுகாப்புப்படையின் முன்னாள் அதிகாரிகள் இருவருக்கு எதிராகத் தடைவிதிக்கும் அமெரிக்காவின் அறிவிப்பானது வெறுமனே மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கீழ்மட்ட அதிகாரிகளின் வீசாக்களை முடக்குவதற்கானது மாத்திரமல்ல.

 மாறாக அவர்களுக்குக் கட்டளைகளைப் பிறப்பித்த – தற்போதும் உயர் அதிகாரங்களைக்கொண்ட பதவிகளிலிருக்கும் பலருக்கான எச்சரிக்கை சமிக்ஞையாகும் என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார். 

 அதேவேளை இதுகுறித்து மேற்படி செயற்திட்டத்திடம் கருத்து வெளியிட்டுள்ள 2008 – 2009 ஆம் ஆண்டில் கடத்தப்பட்ட 11 பேரில் ஒருவரின் உறவினர், ‘அண்மைக்காலங்களில் நம்பிக்கை இழந்திருந்த எனது மனதில் மீண்டும் நம்பிக்கையின் வித்து துளிர்விட ஆரம்பித்திருப்பதுடன் அமெரிக்காவின் அறிவிப்பு அதற்கு நீரூற்றுவதாக அமைந்துள்ளது. இது எமக்கு சற்று தைரியத்தையும் நம்பிக்கையையும் அளிக்கின்றது’ என்று தெரிவித்துள்ளார்.

 மனிதகுலத்திற்கு எதிரான மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக்கூறி ‘நேவி சம்பத்’ என்று அறியப்படும் கடற்படைப் புலனாய்வுப்பிரிவின் முன்னாள் அதிகாரி லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி மற்றும் இராணுவத்தின் முன்னாள் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஆகியோர் தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்கா தடைவிதித்திருக்கின்றது.

 அமெரிக்காவின் இத்தீர்மானம் தொடர்பில் சர்வதேச உண்மைக்கும் நீதி;க்குமான செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்கள் கூறப்பட்டுள்ளன
 
 அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,  

 கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற வலிந்து காணமலாக்கப்படல் சம்பவங்களுடன் தொடர்புடைய இலங்கைக் கடற்படைப் புலனாய்வுப்பிரிவின் முன்னாள் அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் கடந்த 2000 ஆம் ஆண்டில் 8 தமிழர்களை சட்டவிரோதமாகப் படுகொலை செய்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் தடைவிதித்துள்ளமையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் வரவேற்றுள்ளனர்.

 பதினொருபேர் கடத்தல் வழக்கில் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவருமான லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி இலங்கைக் கடற்படைப் புலனாய்வுப்பிரிவின் முன்னாள் அதிகாரியாவார். நீதிமன்ற ஆவணங்களின் பிரகாரம் சந்தன ஹெட்டியாராச்சி இரண்டு விசேட புலனாய்வுக்குழுக்களை வழிநடத்தியதாகவும் அவற்றின் ஊடாகவே மேற்படி கடத்தல்கள் மற்றும் காணாமலாக்கப்படல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 

 மேற்படி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமலிருப்பதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கடந்த வியாழக்கிழமை வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

 அதேபோன்று கடந்த 2000 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் மிருசுவிலில் சிறுவர்கள் உள்ளடங்கலாக 8 தமிழர்களைச் சட்டவிரோதமாகப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்ப வழங்கி விடுதலை செய்யப்பட்டார். 

 இவ்வாறானதொரு சூழ்நிலையில் அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் 2008 – 2009 ஆம் ஆண்டில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 பேரில் ஒருவரின் உறவினர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

 ‘நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கைவிடப்படும்போது நாங்கள் நம்பிக்கையை இழந்தோம். நீதியை வழங்குமாறு கோருவதில் என்ன அர்த்தம் இருக்கின்றது? என்று நான் என்னுடைய குடும்பத்தினரிடம் கேள்வியெழுப்பினேன். ஆனால் தற்போது மீண்டும் எனது மனதில் நம்பிக்கையின் வித்து துளிர்விட ஆரம்பித்திருப்பதுடன் இந்தச் செய்தியின் மூலம் நீங்கள் அதற்கு நீரூற்றுகின்றீர்கள். குறைந்தபட்சம் அமெரிக்காவேனும் இதனைச் செய்தமையினையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இது எமக்கு சற்று தைரியத்தையும் நம்பிக்கையையும் அளிக்கின்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 அதேவேளை ‘அமெரிக்காவின் அறிவிப்பானது வெறுமனே மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கீழ்மட்ட அதிகாரிகளின் வீசாக்களை முடக்குவதற்கானது மாத்திரமல்ல. மாறாக அவர்களுக்குக் கட்டளைகளைப் பிறப்பித்த – தற்போதும் உயர் அதிகாரங்களைக்கொண்ட பதவிகளிலிருக்கும் பலருக்கான எச்சரிக்கை சமிக்ஞையாகும். ஜனாதிபதி ஆணைக்குழுக்களை அமைத்து, குற்றச்சாட்டுக்களைக் கைவிடுவதற்கான பரிந்துரைகளை வழங்குவதன் மூலமும் குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளிப்பதன் மூலமும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளுக்குப் பதிலளிக்கவேண்டிய நிலையிலிருக்கும் கட்டளை அதிகாரிகளைக் காப்பாற்றிவிடமுடியாது’ என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments