அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் – மியாமி நகரில் 12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி 100-க்கு மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கட்டட இடிபாடுகளில் சிக்கிய 4 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. 40 பேர் வரை உயிரிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 159 பேர் காணாமல் போயுள்ள நிலையில் இவா்களில் பெரும்பாலானோர் இறந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மியாமி நகரில் கடற்கரைக்கு மிக அருகில் அமைந்துள்ள சர்ப்சைட் என்ற இடத்தில் சாம்ப்லைன் டவர்ஸ் என்கிற 12 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. 1981-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தில் மொத்தம் 136 வீடுகள் இருந்தன.
இடிந்து விழுந்த கட்டத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருகின்றன. 40 பேர் வரை காயங்களுடன் உயிரோடு மீட்கப்பட்டனர். இவர்களில் 11 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 பேரை சடலங்காளாக மீட்க முடிந்தது. ஏனையோரைத் தேடிக் கண்டறிந்து மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், பொலிஸார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் என நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்.
மோப்ப நாய்கள் மற்றும் பிற கருவிகளை பயன்படுத்தி இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணிகள் இட்ம்பெற்று வருகின்றன.
அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தபோது அங்கு மொத்தம் எத்தனை பேர் இருந்தனர்? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் 149 பேர் இடிபாடுகளில் சிக்கி மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களின் கதி என்ன? என்பது தெரியாத நிலையில், மீட்புக்குழுவினர் முழு நம்பிக்கையுடன் தங்களின் மீட்பு பணிகளை தொடர்ந்து வருகின்றனர்.
இதனிடையே அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தை தொடர்ந்து ஜனாதிபதி ஜோ பைடன் புளோரிடா மாகாணத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதன் மூலம் மத்திய அவசர முகாமைத்து நிறுவனம் மாகாண அரசின் மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளுக்கு உதவிகளை வழங்கும்.
ஏற்கனவே கடினமானதாக இருக்கும் மீட்பு பணிகள் தொடர்ச்சியான மழை மற்றும் புயலால் மேலும் சிக்கலாகியுள்ளதாக மீட்புப் பணிகள் குறித்து மியாமி நகர பொலிஸ் பொறுப்பதிகாரி பெரெட்டி ராமிரெஸ் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி எந்த நேரத்திலும் அடுக்குமாடி குடியிருப்பின் எஞ்சிய பகுதி இடிந்து விழக்கூடும் என்ற அச்சத்துடனேயே மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.
இடிபாடுகளில் சிக்கி காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களின் அன்புக்குரியவர்கள் என்ன நேர்ந்தது? என்பதை அறிந்து கொள்ள விபத்து நடந்த இடத்துக்கு அருகில் உள்ள சமூக மையத்தில் சோகத்துடன் காத்திருக்கின்றனர்.
இதனிடையே இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டினர் பலர் தங்கியிருந்ததாகவும் இதில் பெரும்பாலானவர்கள் தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.