அமெரிக்காவின் அரச அணுவாயுத நிறுவனத்தை, இணையவழி ஊடறுப்பாளர்கள் ஊடறுத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சுமார் 6185 பேரழிவு அணுவாயுதங்களை அமெரிக்கா வைத்திருக்கிறது. இவற்றில் 1365 அணுவாயுதங்கள் பெரும்பாலும், குண்டுவீச்சு விமானங்களிலும், ஏவுகணைகளிலும் பொருத்தப்பட்டு தாக்குதல்களுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வணுவாயுதங்களுக்கு பொறுப்பாக, அமெரிக்க அரச அணுவாயுத நிறுவனம் இருந்துவருகிறது.
மேற்படி அமெரிக்க அரச அணுவாயுத நிறுவனத்தின் இணைய வலையமைப்பை ஊடறுப்பாளர்கள் ஊடறுத்துள்ளதாகவும், அமெரிக்காவின் “நியூ மெக்சிகோ” மற்றும் “வொஷிங்டன்” ஆகிய இடங்களிலிருக்கும் மேற்படி நிறுவனத்தின் ஆய்வகங்களின் வலையமைப்பையும் ஊடறுப்பாளர்கள் ஊடறுத்துள்ளதாகவும் அமெரிக்கத்தரப்பில் சொல்லப்படுகிறது.
வலையமைப்புக்களை ஊடறுத்த தாக்குதலாளிகள் எவ்வாறான தகவல்களை பெற்றுக்கொண்டார்கள், அல்லது எவ்வாறான சேதங்களை ஏற்படுத்தினார்கள் என்பது போன்ற தகவல்கள் இதுவரை தெரியவில்லையென்று தெரிவிக்கும் அமெரிக்க அதிகாரிகள், எனினும், மிகமிக இரகசியமான பாதுகாப்பு வலையமைப்பை ஊடறுப்பாளர்களால் ஊடறுக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மேற்படி ஊடறுப்பு, ரஷ்ய ஆதரவோடேயே நடத்தப்பட்டுள்ளதாக தம் சந்தேகிப்பதாக தெரிவித்திருக்கும் அமெரிக்கா, கடந்த காலங்களில் அமெரிக்காமீது இவ்வாறான இணையவழி ஊடறுப்பு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், அவற்றில் இத்தாக்குதலானது மிக மோசமானது என்றும் தெரிவித்துள்ளதோடு, இவ்வாறான தாக்குதல்கள் அமெரிக்காவின் நவீன இலத்திரனியல் கட்டமைப்பின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியிருப்பதாகவும் தெரிவிக்கிறது.
அமெரிக்க கணினி வலையமைப்புக்கள்மீது ஊடறுப்புக்களை மேற்கொள்வதற்கான கணினி மென்பொருட்களை இதுவரையிலும் 40 பேர் தரவிறக்கம் செய்துள்ளதை தான் அறிந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கும், கணினி இயங்குதள மென்பொருள் நிறுவனமான “Microsoft” நிறுவனம், இவ்வாறு ஊடறுப்பு செய்வதற்கான மென்பொருட்களை எதிர்காலத்தில் பலரும் தரவிறக்கம் செய்யும்போது நிலைமை இன்னும் மோசமாகலாமென எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, தானும் ஊடறுப்பு தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேற்படி இணையவழி தாக்குதல்களுக்கு ரஷ்யாவே பின்னணியிலிருப்பதான அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஷ்ய அதிபர் “விளாடிமிர் புதின்”, மாறாக அமெரிக்காவே ரஷ்யாமீது இவ்வாறான இணையவழி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது என்றும், அமெரிக்காமீது மேற்கொள்ளப்படும் இணையவழித்தாக்குதல்களுக்கு ரஷ்யாவே பொறுப்பு என குற்றம் சுமத்துவதன்மூலம், இரு நாடுகளுக்குமிடையில் இருக்கும் உறவுகளை சேதப்படுத்துவதற்காகவே அமெரிக்காவின் நோக்கமெனவும் சாடியுள்ளார்.
கேள்விக்குறியாகியுள்ளதெனவும் தெரிவிக்கிறது.