பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை பறிப்பு! பாகிஸ்தானில் புதிய சட்டம்!!

You are currently viewing பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை பறிப்பு! பாகிஸ்தானில் புதிய சட்டம்!!

பாகிஸ்தானில் பாலியல் வன்முறைக்குற்றங்களில் குற்றவாளிகளாக அறியப்படும் ஆண்களை, இரசாயன முறையில் ஆண்மையிழக்க வைப்பது உட்பட, புதிய சட்டவிதிகள் அடங்கிய சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, பெண்கள் “கன்னித்தன்மை”யை உறுதி செய்யும் நடைமுறையும் தடைசெய்யப்பட்ட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய சட்டவரைபுகளின்படி, பாகிஸ்தானில் பாலியல் பலாத்காரங்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படுமெனவும், நன்கு மாத கால எல்லைக்குள், பாலியல் பலாத்காரம் தெடர்பான வழக்குகள் முற்றுப்பெறும் வகையில் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமெனவும், பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கென தனியான பதிவகம் நாடுதழுவிய ரீதியில் உருவாக்கப்படுமெனவும், பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாக்கப்படுபவர்கள் ஆகக்கூடியது 6 மணிநேரத்துக்குள்ளாக அத்தியாவசியமான மருத்துவ பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள் எனவும் புதிய சட்டமூலம் கூறுகிறது.

இவ்வாறான வழக்குகளில், பாதிக்கப்படும் பெண்களுக்கு மேற்கொள்ளப்படும் “கன்னித்தன்மை” பரிசோதனை புதிய சட்டமூலத்தின் பிரகாரம் தடை செய்யப்படுகிறது.

பாலியல் பலாத்தகாரத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யும் பெண்ணொருவர், ஏற்கெனவே யாருடனாவது உடலுறவு வைத்துக்கொண்டுள்ளாரா என்பதை அறிவதற்காக மேற்படி “கன்னித்தன்மை” பரிசோதனை செய்யப்படுவதாகவும், இதன்மூலம், தான் பலாத்காரம் செய்யப்பட்டதாக முறைப்பாடு செய்யும் பெண், உண்மையிலேயே பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது முடிவு செய்யப்படுவதும் வழமையாக இருந்துவருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு பாதிக்கப்படுபவர்களின் விபரங்கள் வெளியிடப்படுவது புதிய சட்டமூலத்தின்படி தடை செய்யப்படுவதோடு, குற்றவாளிகளாக காணப்படும் ஆண்களுக்கு இரசாயன முறைப்படி ஆண்மையிழப்பு செய்வதற்கும் சட்டம் வழி செய்கிறது.

பாலியல் பலாத்காரங்கள் நிறைந்து காணப்படும் பாகிஸ்தானில் மேற்படி புதிய சட்டமூலத்தில் அந்நாட்டு அதிபர் கைச்சாத்திட்டுள்ளதோடு உடனடியாக சட்டமூலம் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டாலும், நாடாளுமன்றம் அதை 3 மாதகாலத்துக்குள் அங்கீகரிக்கவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள